8. கண்ணன் உதவாதது ஏன்?
பாண்டவர் சூதில் நாட்டையிழந்து காட்டில் வாழ்ந்தனர். பாஞ்சாலியும் கூட இருந்தாள். 
ஒருநாள் ஓய்வாக அறுவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கண்ணனைப் பற்றிய பேச்சு வந்தது. கண்ணபெருமான் கருணைக்கடல். எளியவர்க்கு உதவுபவன். தீமைகண்டு பொறுக்கமாட்டான். எல்லாம் வல்லவன் என்று கண்ணன் புகழை ஒருமனதாக அனைவரும் பேசி மகிழ்ந்தனர்.
"கண்ணன் கருணைக் கடல்தான். தீனரட்சகன்தான். ஏழைகளுக்கு இரங்கியருளுபவன்தான். ஆனால் எல்லோர்க்கும் ஒரேவிதமாக உதவாமல், சிலருக்குமட்டும் உதவுகின்றானே! அது ஏன்?" என்று வீமன் ஓர் ஐயத்தை எழுப்பினான். "நமக்குச் சூது போரில் உதவாத கண்ணன் துரெளபதைக்கு மட்டும் உதவினானே! ஏன்?" என்பதும் வீமன் விடுத்த வினா.
ஐவருள்ளும் சகாதேவன் பெருஞானி, கண்ணன் இயல்புகளை முழுமையாக உணர்ந்தவன். கண்ண பெருமான் பதினாறு ஆயிரம் வடிவெடுத்து நின்ற போது, அவற்றுள் மூலவடிவை அறிந்து கண்ணனை மனத்தால் கட்டியவன்.
அந்தச் சகாதேவன் வீமன் ஐயத்தைத் தெளிவிக்க முன் வந்தான்.
"சூதாட்டத்தில் துரியோதனன் சார்பாகச் சகுனி ஆட முன்வந்த போது. நாமும் நம் சார்பாக ஆடுவதற்குக் கண்ணனை அழைத்திருத்தல் வேண்டும். நாம் அவ்வாறு செய்வதை இழிவு எனக் கருதினோம். ஐவருக்கு மோதுபோர் மட்டுமே தெரியும் சூதுபோர் தெரியாது என்று உலகம் பழிக்குமே என மானம் கருதினோம்". 
“அவ்வாறு வறட்டுக் கெளரவம் கருதாமல் இருந்திருந்தால், நமக்கு இந்தக் கதி நேருமாறு கண்ணன் விட்டிருக்க மாட்டான்.
“திரெளபதியோ இராச சன்பயில் அவமானப்பட்டபோது, கெளரவத்தையோ மான அபிமானத்தையோ எண்ணவில்லை. உடுக்கை இழந்தவளின் கை அதைப் பற்றவில்லை. அதற்கு மாறாக அவள் கைகள் தலைக்குமேல் குவிந்தன. மானம் போவதால், நாக்குச் செயல் இழக்கவில்லை. “கோவிந்தா! கோவிந்தா!” என்று கதறினாள். அவமானத் துயரத்தால் கண்கள் வறளவில்லை. கண்ணீரை ஆறுபோலக் கொட்டின. என்னால் முடியும் என்ற இறுமாப்பு உள்ள வரையிலும் கண்ணன் உதவ, ஓடிவர மாட்டான். என் செயலால் இனி ஏதும் இல்லை. இனி எல்லாம் உன் செயலே என்று தஞ்சமடைந்து விட்டால், அவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பது அவன் பொறுப்பாகி விடுகின்றது. அதனல்தான் திரெளபதிக்குப் புடவை சுரந்தான்” என்றான் ஞானி சகாதேவன்.
“ஆம்!ஆம்! நாம்தான் மான உணர்வினால் தவறு செய்தோம். அதன் பலனை அனுபவிக்கின்றோம்” என்று ஒருமித்த குரலில் அனைவரும் கூறிக் கண்ணன் திருவடி நண்ணும் மனமுடையவர் ஆயினர். 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel