இந்த உலகம் தோன்றியது; அல்லது படைக்கப்பட்டது இன்பங்களை அனுபலிக்கவா? அல்லது இன்னல்களோடு போராடிக் கொண்டு இருக்கவா? என்ற ஐயம் சிலருக்கு எழுகின்றது. அந்த சந்தேகங்களுக்குப் பதில் சொல்லும் வகையில் மகரிஷி குறிப்பிட்டதாவது:
“இந்த உலகப் படைப்பு நல்லதுமன்று; அதே நேரத்தில் கெட்டதுமன்று. தன்னுடைய எண்ணங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மனம்தான் எல்லாவற்றையும் உண்டாக்குகின்றது.
ஒரு பெண், பெண்ணாகத்தான் இருக்கிறாள். ஆனால், ஒரு மனம் அவளை அம்மா என்று அழைக்கின்றது. மற்றொரு மனம் சகோதரி என்று கூப்பிடுகின்றது; இன்னொரு மனம் அத்தை என்று சொல்லுகின்றது. எனவே, ஆண்கள் பெண்களை விரும்புகிறார்கள். பாம்பை வெறுக்கிறார்கள்.
சாலை ஓரத்தில் கிடக்கும் கல்லையும், புல்லையும் யாரும் மதிப்பதில்லை; கவனிப்பதுமில்லை. இந்தத் தொடர்புகள் தாம் இந்த உலகத்தின் துன்பங்களுக்குக் காரணம்.
“உலகப் படைப்பு அரச மரம் போன்றது; பறவைகள் அதிலே உள்ள பழத்தைத் தின்ன வருகின்றன; அவற்றின் கூடுகளை அந்த மரத்திலே கட்டிக் கொள்கின்றன; மனிதர்கள் அந்த மரத்தின் அடியிலே களைப்பாறுகிறார்கள். ஆனால், அதே மரத்தில் சிலர் தூக்குப் போட்டுக் கொண்டு சாகின்றார்கள். மரம் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தனது பயன்பாடுகளை உணராமல் வழக்கம் போலவே மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது.”
“மனித மனம்தான் கவலைகளை உண்டாக்குகின்றது. பின்னர் அதே மனம் தான் பிறர் உதவிகளுக்காக அழவும் செய்கின்றது. ஒருவனுக்கு மன மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்குக் கவலைகளை மட்டுமே கொடுத்திட கடவுள் என்ன ஓரவஞ்சகரா? படைப்பில் எல்லாவற்றுக்குமே இடம் இருக்கிறது. ஆனால், மனிதன் நல்லவற்றைப் பார்க்க, நல்லவற்றை எடுத்துக் கொள்ள, அதன்படி நடந்து கொள்ள மறுக்கிறான்.”
“மனிதன் அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. சுவை மிக்க உணவுப் பொருள்களை எதிரே வைத்துக் கொண்டு, அவற்றை வேண்டுமளவு எடுத்து உண்ணாமலே பார்த்துக் கவலைப்படும் பசித்த மனிதனைப் போல நடந்து கொள்கிறான்; வாழ்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா?”
“அதிருஷ்ட வசமாக எல்லையில்லாக் கருணையுடன் கடவுள் மனிதர்களை மன்னித்து விடுகிறார். மனிதர்களுக்காக நீதி நெறிகளை, ஞான நூல்களை, சான்றோர்களை, வேதங்களை அளித்து அவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்திடப் பார்க்கிறார்.”
“இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் எல்லாம் எதற்கும் உதவாதவை. துன்பங்களை, வேதனைகளைக் கொடுப்பவை என்றும் தெரியும். தெரிந்தும் கூட நாம் இன்பங்களையே தேடிச் செல்லுகிறோம். இதற்கு எப்படி ஒரு முடிவு காண்பது?”
"கடவுளைப் பற்றி சிந்தனை செய்; நினைத்துக் கொண்டே இரு; எல்லாப் பற்றுக்களும் உன்னை விட்டு விலகி ஓடும். ஆசைகள் எல்லாம் ஒழிந்து பின்பு கடவுளைத் தொழுவோம். பிரார்த்திப்போம் என்று நினைத்தால், நீ பலகாலம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.” என்று மகரிஷி அனைவருக்கும் அருளுரை கூறினார்.
இறையருள் பெற குரு ஒருவர் தேவை
இறைவனை நினைத்து இவ்வுலகப் பற்றுக்களை விடுதற்கும், நல்வழிகளை நாடுவதற்கும், பரமனடி அடைவதற்கும் ஒரு குருவர் தேவை. இதுபற்றி மகரிஷி கூறிய கருத்துக்கள்.
இரமண மகரிஷியை நேரில் சந்தித்து, அவரைத் தனது ஞான குருவாக ஏற்றுக் கொள்ள நினைத்த ஒருவர், “நான் பல நூல்களைக் கற்றுள்ளேன்! அவற்றை மீண்டும் மீண்டும் சிந்தித்துள்ளேன். ஒருவரை நல்வழிப்படுத்த தனியாக ஒரு குரு தேவையில்லை என்று அந்த நூல்கள் கூறுகின்றன. பல ஆண்டுகள் அந்த நூல் கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்தேன். ஆனால், ஆன்ம விடுதலைக்குச் செல்லும் கடினமான பாதைக்கு வழிகாட்டிட ஒரு ஞான குரு தேவை என்பதை இப்போது உணர்ந்து விட்டேன். மகரிஷி அவர்களே! எனக்கு ஆன்மஞான குருவாக தின்று நல்வழிப்படுத்த வேண்டுகிறேன்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு மகரிஷி என்ன பதில் கூறினார் தெரியுமா? இதோ அவை...” எல்லா வேதங்களும் ஆன்ம குரு வேண்டுமென்றுதான் அறிவுறுத்துகின்றன. நீ வேண்டிச் செல்லும் முடிவான ‘நான்’ என்பவர்தாம் குரு, ஆண்டவனை வேண்டிச் செல்பவனுடைய மனமானது அறியும் படியாக, அது ஒரு மானிட உருவம் எடுத்துக் கொள்கிறது. மானிடனின் அறியாமையைப் போக்குவதற்காகக் கடவுள் அல்லது குருதான், மனித உருவில் வருவதாகத் தாயுமானவர் கூறுகிறார்."
அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ராய் என்பருக்கு இதே சந்தேகம் எழுந்தது. கீழ்க்கண்ட கேள்விகளை அவர் ரமணரிடம் கேட்டுத், தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.
“சிலர், நீங்கள் குரு தேவையில்லை என்று கூறியதாகச் சொன்னார்கள். சிலர், இதற்கு நேர்மாறாகத் தாங்கள் கூறியதாகவும் சொன்னார்கள். மகரிஷி இக் கருத்துக்களைப் பற்றிக் கூறுவது என்ன?” என்று அந்தக் கல்வியாளர் நேரில் கேட்டார்.
அந்த வினாவுக்கு மகரிஷி விடையளித்த போது, “குரு தேவையில்லை என்று நான் எப்போதுமே கூறியதில்லை” என்றார்.
அதற்கு அந்த நூல் பல கற்ற கல்வியாளார்; மகான் அரவிந்தரும், மற்றவர்களும் உங்களுக்குக் குருவாக யாருமே இருந்தது கிடையாது என்று கூறுகிறார்களே....” என்ற சந்தேகத்தை ரமணரிடம் எழுப்பியபோது,
“இவை எல்லாம் நீ எதைக் குரு என்று அழைக்கிறாய் என்பதைப் பொறுத்தது. அவர் மனித உருவில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.”
"தத்தாத்தேயருக்கு இருபத்து நான்கு குருக்கள், பஞ்ச பூதங்களும் - நிலம், நீர் அனைத்துமே. இந்த உலகில் உள்ள எல்லாப் பொருள்களுமே அவருக்குக் குருவாக இருந்தன. எனவே, குரு ஒருவர் அவசியம் தேவை. உபநிடதங்கள், குருவால் மட்டுமே ஒரு மனிதனைக் கடவுளிடம் அழைத்துச் செல்ல முடியும் என்று கூறுகின்றன. ஆகையால் ஆன்ம நல்வழிப் பாட்டுக்கு ஓர் ஆன்ம குரு அவசியம் தேவையே என்றார் மகரிஷி.
மகான் கூறியதைக் கேட்டுக் கொண்ட அந்த நூல் வல்லார்; மீண்டும்; “நான் சொல்வது மானிட உருவில் உள்ள குரு ஒருவரை. மகரிஷிக்கு அப்படிப்பட்டவர் யாரும் இல்லையே.”
“ஒரு சமயத்தில் இல்லாது போனாலும், வேறொரு சமயத்தில் நான் பெற்றிருக்கலாம். ஆனால் நான் அருணாசல சுவாமியைப் பற்றிப் பாடவில்லையா?
“முதலில் மனிதன் தன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி கடவுளிடம் வேண்டுகிறான். தன்னுடைய ஆசைகளை விட்டு, கடவுளை அடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும் காலமும் வரும். மனிதனுடைய தேவைக்கும், பிரார்த்தனைக்கும் ஏற்றவாறு கடவுள் மனித உருவிலோ, அல்லது மற்ற உருவிலோ தோன்றி அவனுக்கு வழிகாட்டித் தன்னுள் அழைத்துக் கொள்கிறான்.” என்றார் மகரிஷி!
இந்த நேரத்தில் ரமணாஸ்ரமத்திற்கு அமெரிக்க யாத்ரிகர்கள் சிலர் வந்திருப்பதாக, மகரிஷியின் அணுக்கத் தொண்டரான பழனிசாமி என்ற சாமியார் ஓடிவந்து மகரிஷியிடம் கூறினார்!
வந்த அமெரிக்க யாத்ரிகர்கள் ரமண மகரிஷியைச் சந்தித்து ஆசி பெற்றார்கள். நாளை மீண்டும் சந்திப்போம். ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறுங்கள் என்று மகான் கூறவே, பழனிசாமி சாமியார் எல்லா வசதிகளையும் அவர்களுக்குச் செய்து கொடுத்தார்.