இரயில் வண்டியிலே அமர்ந்திருந்த சிறுவன் வெங்கட்ராமன், திருவண்ணாமலை எப்போது வரும் என்று எதிர்பார்த்தவாறே ஆடி அசைந்து பயணம் செய்து கொண்டே இருந்தான். ஒவ்வொரு ரயில் நிலையப் பெயர்ப்பலகையையும் கவனமாகப் படித்துக்கொண்டே போனான்.
1896-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளன்று அதிகாலை நேரத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வண்டி வந்து நின்றது. வெங்கட்ராமன் வண்டியை விட்டுக் குதித்தான். அப்போது அண்ணாமலைக் காற்று சில்லென்று அவன் உடல் மீது படர்ந்தது. அதற்குள் அன்றைய இரவு இருள்-சிறிது சிறிதாகச் சிறுத்து ஞான விடியல் ஒளி பெருத்துப் பரவிக் கொண்டே ஒளிர்ந்தது. அருணாசலேசுவரர் கோயில் திருவண்ணாமலையில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை வெங்கட்ராமன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான்.
இரயில் நிலையத்தில் நின்றபடியே, சிலிர்த்த உள்ளத்தோடு தன்னை மறந்து வெங்கட்ராமன், இரு கை கூப்பி கோபுர தரிசனம் கண்டு வணங்கினான். கோபுரம் உள்ள இடத்துக்கு அவன் விரைந்தோடி வந்தான் அப்போது அங்கே மக்கள் நடமாட்டமே இல்லை! ஆலயத்தின் கதவுகள் மூடிக்கிடந்தன.
திருக்கோயில் சுற்றுச் சுவர்களைச் சிலர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால், வழக்கமாகத் திறக்கப்படும் நேரத்திற்கு முன்னாலேயே கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. சில பிச்சைக்காரர்கள் கோபுரம் முன்பு அருணாசலமே கதியென்று விழுந்து கிடந்தார்கள். அவர்களுக்கு அதுதான் வீடும் வாசலும்!
திறந்து கிடந்த கோபுரத்துக்குள்ளே முதல் ஆளாக வெங்கட்ராமன் நுழைந்தான். நேராகக் கருப்பக் கிரகத்துக்குப் போனான். யாராவது கேட்பார்களே என்ற அச்சமே எழவில்லை அந்தச் சிறுவனுக்கு அருணாசலேஸ்வரர் திருவடிகளிலே வீழ்ந்து, வணங்கி, கண்ணீர் சிந்தினான் அவ்வளவும் ஆனந்தக் கண்ணீர்! ‘ஈஸ்வரா, பெருமானே, உம்மைவிட எனக்குக் கதி வேறுயார்? வீட்டைத் துறந்தேன் உம்மை நம்பி நாடி வந்துளேன்; பெருமான் நீங்கள்தான் இனி என்னைக் காக்கும் அம்மையும்-அப்பனும், என்று வாய்விட்டுக் கூறி வணங்கி விட்டுக் கோபுர வாயிலுக்கு மீண்டும் திரும்பி வந்தான் வெங்கட்ராமன்.
அருணாசலேஸ்வரரை வணங்கிய பின் அந்தச் சிறுவன் கண்ட முதல் பலன் என்ன தெரியுமா? திருவண்ணாமலைக்கு வரவேண்டும் என்று வெங்கட்ராமன் நினைப்பதற்கு ஆறேழு வாரங்களுக்கு முன்பே, அந்தச் சிறுவன் மதுரையிலே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நேரத்திலேயே, அவனது உடலிலே ஏதோ ஓர் அரிப்பும்-எரிச்சலும் ஏற்பட்டு எப்போது பார்த்தாலும் உடலைச் சொறிந்த வண்ணமே இருந்தான்.
அருணாலலேஸ்வரப் பெருமானை, வெங்கட்ராமன் திருவண்ணாமலைத் திருக்கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்பு, அந்த எரிச்சலும், அரிப்பும் எங்கு போய் மறைந்ததோ தெரியவில்லை. மாசுமறுவற்ற உடலையுடைய அழகிய தோற்றமே அவனுக்கு மீண்டும் ஏற்பட்டு விட்டதாக, பகவான் ரமண மகரிஷி தனது வரலாற்றின் ஓரிடத்தில் எழுதியுள்ளார். அதுதான் அவர் கண்ட முதல் அருணாசல மகிமையாகும். எரிச்சலோடும் அரிப்போடுமா போயிற்று? அவர் எண்ணங்களில் அன்று முதல் மண், பொன், பெண் என்ற சிற்றின்ப எண்ணங்களும் அழிந்து விட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் இருந்தபோது அவர் கேள்விப்பட்ட அருணாசலம் என்பது, ஒரு மலையின் பெயர் என்று தெரியாது. திருவண்ணாமலை வந்த பிறகுதான் அருணாசலம் என்பது ஒரு ஞானமலை; சிவன்மலை; தவமலை; யோகிகள் மலை; அஞ்ஞானத்தை அழிக்கும் மலை; மெய்ஞானத்தைப் பேணும் மலை; ஆன்ம பலத்தை வளர்க்கும் மலை என்பதை அந்தச் சிறுவன் வெங்கட்ராமன் புரிந்து கொண்டான்.
வெறும் கல்லாலான, சுதையாலான, உலோகங்களாலான வடிவங்களையோ அல்லது மேற்கண்ட சக்திகளைக் கொண்ட மலையையோ-அந்தச் சிறுவன் தனக்கு அருள் பாலிக்கும் பெருமானாக எண்ணவில்லை. அருணாசலம் என்ற சொல்லை, பெயரை என்று அவன் கேள்விப் பட்டானோ, அன்றே அவனது மனத்தில் அந்தச் சொல் பெரியதோர் அருட் தத்துவமாகத் தோன்றிவிட்டது. அந்த திருவருட்சக்திதான், ஆன்ம சக்திதான் வெங்கட்ராமனைத் திருவண்ணாமலைக்கு காந்த சக்திபோல ஈர்த்து, இழுத்து வந்தது. மேற்கண்ட இந்த இறை சக்தி உண்மையைப் பிற்காலத்தில் அவர் பகவான் ரமண மகரிஷியாக உருவெடுத்தபோது தனது வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கீழுரில் வெங்கட்ராமனுடைய கடுக்கண்களை விற்று முத்துசாமி கொடுத்த அந்தப் பணத்தில் ரயில் கட்டணம் போக மீதியிருந்த பணத்தை வெங்கட்ராமன் அங்கே இருந்த ஐயங்குளத்தில் வீசி எறிந்தார். தான் அணிந்திருந்த பார்ப்பனப் பிறப்பு அடையாளமான, உயர்சாதியை உணர்த்தும் சாதிச் சின்னமான பூணுலைப் பார்த்து, பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்ற கேள்வியைத் தனக்குத்தானே மனத்தில் எழுப்பி, அந்தப் பூணுலை அறுத்து அதே குளத்தில் தூக்கி எறிந்தார்.
முத்துசாமி கொடுத்திருந்த அவருடைய வீட்டு முகவரிச் சீட்டையும் கிழித்து வீசினார். அதே நேரத்தில் தான் போட்டிருந்த
சட்டையையும் கழற்றிக் குளத்திலே போட்டு விட்டார். மிகுதியாக அவர் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்தார். அதைக் கோவணம் போலக் கிழித்துக் கட்டிக் கொண்டார். மற்றவற்றைக் குளத்து நீரிலே விட்டுவிட்டார். அஞ்ஞான மாயையாக அது மிதந்து, ஞானக் குளத்தின் அமித்திலே ஆழ்ந்து சரணடைந்தது.
திருக்கோயில் அருகே முடிவெட்டுவோன் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை வெங்கட்ராமன் கண்டார். அவனிடம் சென்று தனது தலையை மொட்டை அடிக்கச் சொல்லி அவர் மொட்டைத் தலையரானார்.
மொட்டை அடித்துக் கொண்டவவர் அக் குளத்திலே குளித்தாரா என்றால் அதுவுமில்லை. அதே பழநியாண்டிக் கோலத்தோடு கோயிலுக்குள் நுழைந்தார். அதுபெரிய கோயிலானதால் அங்கே ஓரிடத்தில் சென்று உட்கார்ந்து விட்டார். அந்த இடம் வெங்கட்ராமன் தியானம் செய்ய வசதியான இடமாகவும் இருந்தது. கோயிலுக்கு எதிரில் ஆயிரங்கால் மண்டபம், அதனருகே ஒரு பூங்கா, அருகிலே ஒரு குளம். அதனைச் சிவகங்கைத் தடாகம் என்று இன்று மக்கள் அழைக்கிறார்கள்.
திருக்கோவிலின் முதல் பிரகாரத்தின் வடதிசையில் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது அல்லவா. அதன் நடுவில் ஒரு மேடை உள்ளது. அதற்கும் தென்கிழக்கே ஒரு பாதாளக் கோயில் இருக்கிறது. அங்கு ஒரு சிவலிங்கம் உள்ளது. வெங்கட்ராமன் அக்கோயிலுக்குள் சென்ற காலத்தில் அதற்குப் பூசை வழிபாடு ஒன்றும் செய்யும் பழக்கம் இல்லை. இப்போது அந்த இடம் பாதாள லிங்கேஸ்வரர் திருக்கோயிலாகி, பூசைகள், வழிபாடுகள் நடக்கின்றன. இந்த இடத்தைத்தான் இராஜகோபாலாச்சாரியார் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது விழா நடத்திக் கோலாகலமாகத் துவக்கி வைத்தார்.
இவ்வளவு சிறப்புக்களைப் பெற்று பிற்காலத்தில் இந்தக் கோயில் பேரும் புகழும் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு மூல காரணமும் - முதல் சிந்தனையும் தோற்றுவித்தவர் பகவான் ரமண மகிரிஷிதான்.
இத்தகைய பெருமையுடன் இன்றும் மக்கள் போற்றி வரும் இடம்தான், ரமணர்-வெங்கட்ராமனாக திருவண்ணாமலைக் கோயிலுக்குள் நுழைந்தபோது, பூசைகள், வழிபாடுகள் ஏதும் நடைபெறாத பாழ்பட்ட இடமாக இருந்தது. அந்தப் பாதாளக் கோயில் உள்ளே எப்போதும் ஒரே இருள் கவ்விக் கிடக்கும். வெளவால் புழுக்கைகள், துரிஞ்சல் எச்சங்கள், சிறுநீர்கள், சிலந்திக் கூடுகள் எல்லாம்பெருகி, ஒரே நாற்றமடித்த இடமாக அது இருந்தது. எனவே, சுருங்கக் கூறுவதானால், அந்தப் பாதாளக் கோயில் புழு, பூச்சிகள், பாம்பு, தேள்கள் ஆடசி செலுத்தும் இடமாக இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு நரகம் போன்றிருந்த, இருள் கவ்விய இடத்தைத்தான், வெங்கட்ராமன் என்ற அந்தச் சிறுவன் தனது தியான சாதனைகளுக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தான். அங்கே இருந்த மேடை மீது உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தியானங்களைச் செய்து வந்தான் வெங்கட்ராமன்.
தியானம் கலைந்ததும், அந்தச் சிறுவன் அங்கும் இங்குமாக நடப்பார். எதிர்பாராமல் யாராவது அங்கு வந்து உண்பதற்காக ஏதாவது ஆகாரம் கொடுத்தால்தான் சாப்பிடுவாரே தவிர, எவரிடமும் போய் கெஞ்சிக் கேட்கமாட்டார். பட்டினத்துத் துறவியார் கூறியதைப் போல இருக்கும் இடம் தேடி சிறுவனுக்கு உண்ண உணவு வரும்.
வெங்கட்ராமன் தான் உலகைத் துறந்தார். உலகம் அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா? அதுவும் பழநியாண்டி முருகனைப் போலக் கோவணதாரியாக ஒரு பையன் உட்கார்ந்திருப்பதால், அவனைப் போன்ற வயதுப் பையன்கள் விட்டுவிடுவார்களா சும்மா?
அவர்கள் கூட்டமாக வந்து கேலி செய்தார்கள் ஏய் கோவணாண்டி என்று கூப்பிடுவார்கள். ‘கோமணம் கட்டிக்கிட்டு வெட்கமில்லாமல் உட்கார்ந்திருக்கிறான் டோய்’ என்பார்கள். சிலர் கல்லாலடிப்பார்கள்; வேறு சிலர் அவன் பைத்தியண்டா என்று கெக்கலிட்டுக் கொட்டுவார்கள். இன்னும் சிலர் ‘பைத்தியம் பைத்தியம்’ என்று கைகொட்டி பழித்துக் கிண்டலும் கேலியும் செய்வார்கள். வேலையற்றதுகளுக்கு இதுவே ஒரு வேலை என்று எண்ணி தினந்தோறும் வந்து வெங்கட்ராமன் தியானத்தைக் கலைத்துக் குறும்பாட்டம் ஆடுவார்கள்.
இவற்றையெல்லாம் கண்ட வயது முதிர்ந்தவர்கள் வெங்கட்ராமனிடம் இரக்கம் காட்டுவார்கள். மற்றும் சிலர் பரிவோடு அவரைப் பால சந்நியாசி என்று அன்போடு அழைத்து பயபக்தியோடு எண்ணி அவருக்குத் தொண்டு செய்வார்கள். அதனால் எல்லாம் தியானம் கலைவதால், வேறு ஓரிடமான பாதாளலிங்கம் இருக்கும் இடத்துக்கு மாறிச் சென்று தியானம் புரிவார் வெங்கட்ராமன்.
பாதாள லிங்கக் கோயில் எப்படிப்பட்ட இடம் என்பதை முன்னே விளக்கியிருந்தோம் அல்லவா? வேறு வழி ஏதும் புலப்படாத அந்தப் பாலயோகி, அதே இடத்துக்கே சென்று தியானம் செய்திடும் நிலை உருவானது.
பாதாள அறை, பூச்சி புழுக்களது நாற்றமும், அவற்றின் நடமாட்டமும் அதிகமாக உள்ள இடம். பாம்புகள் கூட அந்த இடத்திலே பஞ்சணை கொண்டிருக்கும். தேளும், சிலந்திகளும் ஒன்றுடன் ஒன்று போராடி வரும் களம் அது. இவற்றை எல்லாம் கவனிக்க அந்த பாலயோகிக்கு நேரமேது? எது என்ன செய்தாலும் அதை அவர் கவனியாமல் அவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், சிலைபோல அமர்ந்து தானுண்டு, சிவமுண்டு, தியானமுண்டு, சித்தவடக்கம் உண்டென்று இருப்பார்.
சும்மா இருக்குமா பாதாள அறைப் பூச்சிகளும், வௌவால்களும், புழுக்களும்? வெங்கட்ராமளை அவை ஒவ்வொன்றாக வந்து கடித்தன; அவன் மேலே ஏறி ஊர்ந்தன. வௌவால் படபட வென்று சிறகடித்து ஆசைகளை எழுப்பியபடியே இருந்தன. சிறுவனது சிந்தனையோ சிறகடித்துக் கொண்டிருந்தன.
பாலசந்நியாசி தனது மனத்தைத் தளர விட்டாரில்லை. எப்படியும் அருணாசலத்தைக் காண வேண்டும் என்ற தவ வேட்கையோடு உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே கொள்கைக் குன்றாக அவர் இருந்துவிடுவதால், பூச்சிகள் கடிக்கும் வலியும், அதனால் ஏற்படும் புண்களும் ரத்தமும், சீழ்வகைகளும், அரிப்பும், தழும்புகளும், காயங்களும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவ்வளவவு மனோபலத்தோடு தவமும், தியானமும் செய்து கொண்டே இருந்தார் அந்த பாலயோகி.
பாலயோகி வெங்கட்ராமனுடைய தவநிலையையும் தியான ஒழுக்கத்தையும் கண்ட ரெத்தினம்மாள் என்ற ஒரு பண்பாள, பெண் சின்ன சாமியார் போல அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவயதுப் பையனது தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபமடைந்து, ‘என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், தனிமையான இடம் உள்ளது. எந்தவித புழு பூச்சிகளது தொல்லைகளின்றி, அமைதியாகத் தவம் புரியலாம்’ என்று இளம் துறவியை அழைத்தாள்.
சாமி, வாய்திறந்து பேசும், பதில் சொல்லும் என்று அந்தப் பெண் வெகு நேரம் காத்திருந்தாள். வெங்கட்ராமன் அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. வாய் திறந்தும் பதில் சொல்லவில்லை. பிறகு, அந்தப் பெண் திரும்பிப் போவதற்கு முன்பு ஒரு துணியை பால சந்நியாசி அருகே வைத்து விட்டு, தேவையானால் உபயோகித்துக் கொள்ளட்டும் என்று சென்று விட்டார்.
வழக்கம் போல கோயில் குறும்புப் பையன்கள் குழுவாக வந்தார்கள். ஏளனம், கிண்டல், கல்லடி, மண்ணடிகள் எல்லாம் நடந்தன. அதை அவ்வழியாகச் சென்ற வெங்கடாசல முதலியார் என்பவர் பார்த்து விட்டு, ஐயோ ஒரு இளம் துறவி அல்லவா அங்கே தவம் செய்கிறார்? அவர்மீது குறும்பர்கள் கற்களை எறிகிறார்களே என்று பயந்து அவர்களை விரட்டியடித்தார். முதலியார் அந்த பாலயோகியைக் காண இருட்டறைக்குள் நுழைந்தார். அப்போது எதரிலே ஒரு சாமியார் வந்தார்.
காயம் ஏதாவது பட்டதா சாமி? என்று முதலியார் அவரைக் கேட்டார்.
எனக்கு எந்தலிதக் காயமும் ஏற்படவில்லை. உள்ளே சின்ன சாமியார் இருக்கிறார். அவருக்கு ஏதாவது காயம் பட்டதோ, என்னவோ போய் விசாரியுங்கள் என்று சொல்லிவிட்டு எதிரே வந்த சாமி போய் விட்டார்.
வெங்கடாசல முதலியார் சின்னசாமி இருக்கும் பாதாள அறைக்குள் போனார். இருட்டல்லவா? ஒன்றும் தெரியவில்லை அவர் பார்வைக்கு. பிறகு இருள் கலக்கத்தில் ஒரு மனிதனுடைய உருவம் தெரிந்தது முதலியார் வெளியே வந்தார்.
மண்டபத்தின் மேற்கே ஒரு தோட்டம், பழனிச் சாமி என்ற ஒரு சந்நியாசி தனது சில சீடர்களோடு அங்கே தங்கி வந்தார். வெங்கடாசல முதலியார் அந்தச் சாமியார், சீடர்களது உதவிகளோடு மீண்டும் பாதாள அறைக்குள் நுழைந்தார்.
நுழைந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து வெங்கட்ராமன் என்ற அந்த இளம் துறவியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்போதும் அந்த இளம் துறவியின் தியானம் கலையவில்லை. தன்னை என்ன செய்கிறார்கள் என்றே அவருக்குத் தெரியாது. பாவம்! பூச்சிக்கடிகளால் ரத்தம் கசிந்தது. அவை கடித்த இடங்களிலே தழும்பு தழும்பாக வீக்கத்தின் அடையாளம்! காயமடைந்த அவரது உடலிலே இருந்து சீழ் வழிந்தது. இவற்றை அவர்கள் கவனித்து, இவ்வளவு வேதனைகளையுமா இந்த பால துறவி சகித்துக் கொண்டிருந்தார் என்று வியப்படைந்தார்கள்.
அதற்குப் பிறகு அந்த இளம் துறவியைக் கோபுர சுப்பிரமணியசாமி கோயிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அன்று முதல் வெங்கட்ராமனுக்கு பிராமண சாமி என்ற பெயர் ஏற்பட்டது.
சுப்பிரமணிய சாமி கோயிலிலே வேறோர் சாமியார் இருந்தார். அவர் பெயர் மௌனசாமி என்பதாகும். அவர் வெங்கட்ராமன் என்ற பிராமண சாமிக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சைகளைச் செய்து உடல் நலம் தேற்றி வந்தார். அந்தச் சாமியார் தான் உண்ணும் போது பிராமண சாமியையும் சாப்பிட வைப்பார். ஒவ்வொரு வேளையிலும் அந்தச் சாமியார் தனது உணவை பிராமண சாமியோடு பங்கீடு செய்து இருவரும் ஒரு சேர அமர்ந்து உணவு உண்டு வந்தார்கள்.
இளம் துறவியான பிராமண சாமியை மௌனசாமி கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்தார். இரவிலானாலும், பகலிலாளாலும் இருவரும் இணைந்தே எப்போதும் காணப்படுவதைக் கோவிலில் உள்ளோர் அனைவரும் கண்டார்கள்.
சில நேரங்களில் பிராமணசாமி, தனக்கு எது கிடைக்கிறதோ அதையெல்லாம் உண்டார். அபிஷேக பால் சில வேளைகளில் இரு சாமியார்களுக்கும் வரும். இருவரும் அதைக் குடித்து மகிழ்வார்கள். சில சமயங்களில் பல மணி நேரமானாலும் அல்லது சில நாட்களானாலும் அபிஷேகப் பால் வராது. அந்த நேரத்திலே பால யோகியான வெங்கட்ராமன் தியானத்தில் ஆழ்ந்து போவார். அந்த மாதிரியான வேளைகளில் மௌனசாமி வாயைப் பிரித்து பாலை ஊற்றிப் பருக வைப்பார்.
கோயில் பூசாரி, இந்த இரண்டு சாமியார்களின் இணை பிரியா துறவுத் தோழமையைக் கண்ட பின்பு, அவர் இருவர்களுக்கும் சேர்த்தே அபிஷேகப் பாலை அனுப்புவார். நேரத்தில் அந்தப் பால்வாரா நிலையேற்பட்டுப் போனால், அக்கம் பக்கம் உள்ள பக்தியன்பர்கள் அந்த இரு சந்நியாசிகளுக்கும் பால் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அறுபது நாட்கள் ஓடின.