←இலக்கிய அரங்கில்

முஸ்லீம்களும் தமிழகமும்  ஆசிரியர் எஸ். எம். கமால்வரலாறு தொடர்கிறது

பின்னிணைப்புகள்→

 

 

 

 

 


437599முஸ்லீம்களும் தமிழகமும் — வரலாறு தொடர்கிறதுஎஸ். எம். கமால்

 

 

 

15
வரலாறு தொடருகிறது

 


வரலாறு என்பது வற்றாத வளமான ஜீவநதி. அதன் போக்கில், வளைவும், வீழ்வும், விரைவும், இயல்பும் காணப்படலாம். ஆனால் அதன் இலக்கு முன்னோக்கி ஒடிக் கொண்டே இருப்பதாகும். தமிழக இசுலாமியர்களது வரலாறும் அந்த நிரந்தர நியதிக்கு விலக்கானதல்ல. தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைக்குரிய பங்குதாரர்களாகிய அவர்களது நிலையில் இழைவும் குழைவும் ஏற்பட்டுள்ளது. இறையுணர்வு விஞ்சிய சமயச்சான்றோர்களாக வளமெல்லாம் குவித்த வணிகவேந்தர்களாக, அறிவார்ந்த ஆட்சியாளராக, ஆற்றல் மிகுந்த போர் மறவர்களாக விளங்கியது எல்லாம் அவர்களுக்கு கடந்தகாலமாகிவிட்டது. சமூக கல்வி பொருளாதார துறைகளில் பின்னடைந்தவர்களாக, நலிவும் மெலிவும் பெற்றவர்களாக வாழ்ந்து வருவது நிகழ்காலமாக உள்ளது. ஒரு சில இசுலாமியர் தங்களது தொழில் திறமையினாலும் அரசியல் செல்வாக்கினாலும், தோல், தோல் பொருட்கள் “விவசாய விளைபொருட்கள், வெளிநாட்டு வியாபாரத் தொடர்பு கள் காரணமாக சிறிது வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், தமிழக இசுலாமியர் என்ற பெரும் அமைப்பில் இவர்கள் மிக மிகச் சிறு பான்மையினராக இருப்பதால் அவர்களது முன்னேற்றமும் வளர்ச்சியும் தமிழக இசுலாமியர் எய்திய ஏற்றம் என மொத்தத்தில் கொள்வது இயலாததொன்று. மாறாக மனத்தை நெருடக்கூடிய வகையில், ஆயிரக்கணக்கான தமிழக இசுலாமியர், அரபு நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், புருனை  நாடுகளிலும்” “வயிறு வளர்ப்பதற்காக” தொழில் செய்து வருகின்றனர். அவர்களது உழைப்பும் வாழ்வும் அந்தந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் மலர்ச்சிக்கும் பயன்பட்டுவருகின்றன. இவர்களால் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பது எங்ஙனம்? அவர்களது உழைப்பையும் ஊதியத்தையும் நம்பி, தமிழ் நாட்டில் வாழ்கின்ற அவர்களது உற்றார் உறவினர்கள் தன்னிச்சையான முறையில் கல்வியும், தொழில் முன்னேற்றமும் காண்பது எப்பொழுது? அறிவும் ஆற்றலும் பெற்றுள்ள ஏனைய சிறுபான்மை பெரும்பான்மை மக்களுடன் இவர்களும் இணைந்து தேசிய உணர்வும் ஒருமைப்பாடும் பெறுவது எவ்விதம்?. . . . . .
தமிழக இஸ்லாமியரைப் பற்றிய இக்கட்டான இந்த வினாக்களுக்கு விடைகள் வழங்க வேண்டியது எதிர்காலம். என்றாலும்; “பழங்கால மேகங்கள் வருங்கால மழை படைக்கும்” என்று கவிஞர் ஒருவரது வாக்கிற்கிணங்க பழமையில் நனைத்தால்தான் புதுமைகள் புலப்படும், வரலாற்று உணர்வும் பழமை பற்றிய சிந்தனைகளும் அவைகளை ஊக்குவிக்கும் என்ற கருத்தில், போக்கில் தமிழக இசுலாமியரை பல புதிய வரலாற்று, இலக்கியத் தடயங்களுடன் எடுத்துக் காட்டுவது இந்த தொகுப்பு. இது ஒரு தொடக்க முயற்சி.
எனினும் வரலாறு தொடர்கிறது. ... ...
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel