←சமுதாயமும் விழாக்களும்

முஸ்லீம்களும் தமிழகமும்  ஆசிரியர் எஸ். எம். கமால்கட்டுமானங்கள்

கல்வெட்டுகளும் செப்பேடுகளும்→

 

 

 

 

 


437596முஸ்லீம்களும் தமிழகமும் — கட்டுமானங்கள்எஸ். எம். கமால்

 

 

 

22
கட்டுமானங்கள்

 

தமிழக இஸ்லாமியர்களான சோனகர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் வாணிபச் செருக்கினாலும், அரசியல் ஊக்குவிப்பு களாலும், வேறு எந்த நாட்டாரும் தமிழகத்தில் எய்தாத, எய்தி இயலாத இலக்கிற்கு வளர்ந்து உயர்ந்து நின்றதை வரலாற்றில் பார்க்கிறோம். இந்த வளர்ச்சியின் சாயல் அவர்கள் வாழ்ந்த தமிழகத்தின் நிலையான வாழ்க்கையின் பல கோணங்களிலும் பிரதிபலித்து நின்றதை அந்தக் கால கட்டத்தின் கட்டுமானம். மருத்துவம், கைவினைக் கலைகள், இலக்கியம் ஆகியவற்றில் காண முடிகிறது. அவர்களது மாளிகைகள் மேனிலை மாடங் களுடன் கூடிய உன்னதமாக உயர்ந்து காணப்படவில்லை. வானது நானும் படியாக அவர்களது கொடைத்திறன் தான் உயர்ந்து விளங்கியது. ஆனால் அவர்கள் வலசையாக வாழ்ந்த மனைகளில் தூய்மையும் எளிமையும் இணைந்து துவங்கின. “சோனக மனையிற்றுாய ... ...” என்பது கம்பன் வாக்கு.[1] என்றாலும், எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவதற்கான தொழுகைப் பள்ளிகளையும் இறைநேசர்களது அடக்க விடங்களையும் அவர்கள் சிறப்பாக அமைத்து மகிழத்தவறவில்லை. புதிய சமயத்தில் அவர்களுக்கு உள்ள அளவு மீறிய ஆர்வத்தையும் அவைகள் பிரதிபலித்தன.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்த அமைப்புகள், அதுவரை கட்டுமானக் கலையில் புகுத்தப்படாத புதிய உத்திகளையும், நிலைகளையும் சுட்டிக்காட்டின. நாளடைவில்,  அவைகளில், மத்திய ஆசிய இஸ்லாமியரது கலைத் திறனும், கீழை நாட்டு திராவிட கலைப் பண்பாடுகளும் இணைந்து நிலை கொண்டன. சோழர்களால் துவக்கப்பட்ட குடவரை, செங்கப் படை, சிறு கற்றளி, குடவரை அமைப்புக்கள், பிற்கால பல்லவர், பாண்டியர், நாயக்கர், பாணியில் எழுநிலை மாடங்களுடன் கூடிய விண்ணகரங்களாக உயர்ந்தன. ஆனால், இந்தச் சோனகர்களது பாணியிலான கட்டுமானங்கள் அளவில் சிறியவையாகவும் அழகில் சிறந்தனவாகவும் அமைந்தன. குறிப்பாக இந்த கட்டுமானங்களின் “வளைவுகள்”. "உள்ளொடுங்கிய விதானங்கள்" உப்பரிகை மாடங்கள் போன்ற உத்திகள் புதுமையானவையாக தோற்றுவிக்கப்பட்டன. தமிழக கட்டுமானங்களில் அதுவரை அவை இடம் பெற்று இருக்கவில்லை.
பொதுவாக தமிழக கட்டுமானங்களில் - வாயில், முகப்பு, சாளரம் போன்ற அமைப்புகள் நேராக நிறுத்தப்பட்ட இரண்டு சட்டங்கள் நிலைகளுக்கிடையில் பிறிதொரு சட்டத்தை குறுக்கில் இணைத்து பொருத்தப்பட்டன. இவை தலைகீழாக எழுதப்பட்டுள்ள “ப” எழுத்துப் போன்று (Π) காட்சியளித்தன. இத்தகைய, இணைச்சட்டம் இல்லாமல் அமைக்கப்படும் கட்டிடங்களை கும்பாஸ் அல்லது கும்பா என்று அழைப்பது உண்டு. இந்த முறையில் நிர்மாணிக்கப்பெறும் கட்டிடங்களது உட்பகுதி காற்று அழுத்தம், காற்றுக்குறைவு அல்லது புழுக்கம் ஆகியவைகள் குறைந்ததாக இருந்தது. மேலும், இத்தகைய கட்டிடங்களின் பக்கவாட்டுச் சுவர்களுக்கு பாரமான கற்பாளங்களைத் தாரிசாகத் தாங்க வேண்டிய நிர்பந்தமும் குறைவு. இந்த கட்டுமானங்களில் பிறிதொரு முறையும் கையாளப்பட்டது. அவைகளில் வளைவு அல்லது குதிரை லாட வளைவு எனப்படுவதாகும்.
துவக்கத்தில் இந்த வளைவான அமைப்புகள் தமாஸ்கஸ் நகரப் பள்ளிவாயிலில், கி.பி. 705ல் அல்வாலித் என்ற இஸ்லாமிய சிற்பியால் ஏற்படுத்தப்பட்டன.[2] பிறகு இஸ்லாமியர் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டை வெற்றி கொண்டு ஆட்சி செய்த பொழுது, அங்கு இந்த முறை பரந்த அளவில் கடைப் பிடிக்கப்பட்டது. காலத்தையும் வென்று காட்சியளித்துக் கொண்டிருக்கும் அந்தக் கலைப்பேழைகளான கட்டிடங்களை இன்றும் ஸ்பெயின் நாட்டின் நகரங்களான கிரானடா, செரவில், கார்டபோ ஆகிய நகரங்களில் கண்ணாரக் காணலாம். ஐரோப்பிய பிரபுக்கள் மாளிகைகளிலும் தேவாலயங்களிலும் இந்தப் புதிய முறை “மூரிஸ் பாணி” என்ற பகுப்புடன் பின்பற்றப்பட்டது. அங்கிருந்து உலகின் பல நாடுகளிலும் இந்த புதிய முறை, கட்டுமானங்களில் பின்பற்றப்பட்டது. ஸிரிய - எகிப்திய, இந்திய - பெர்ஸிய, இந்திய-சீன பாணிகள் எனக் குறிக்கப்பட்டவைகளில் இவை ஊடுருவி நிற்கின்றன. ஏற்கனவே அந்தந்தப் பிராந்தியங்கள், நாடுகளின் நடைமுறையில் உள்ள கட்டுமான முறையில், 
இஸ்லாமியரது இந்தப் புதிய உத்திகளும் கலந்து பொலிவதுதான் மேலே 
சொன்ன பாணி அல்லது பகுப்பு என்பதாகும். நமது நாட்டுக் கட்டுமானங்களை பொறுத்த வரையில், ஆசிரியர் ஜான் மார்ஷல், “இந்த இரு வகையான பாணிகளுக்கும் பொதுவான இணைப்பை ஏற்படுத்துகின்ற ஆதாரமான தன்மை, இஸ்லாமிய இந்து கலை அழகை உள்ளடக்கியவை என்ற உண்மைதான். 
ஒன்றைப்போன்று மற்றொன்றிலும் அலங்காரம் முதன்மையானது. இருமுறைகளும் தங்களது மாட்சிக்கு அதனையே சார்ந்துள்ளன.”எனக் குறிப்பிட்டிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கதாக உள்ளது. வானளாவிய கோபுரம் போன்ற கட்டுமானங்களில் “மினாரத்” என்ற புதிய அமைப்பும் இஸ்லாமிய கட்டுமான முறையாகும். இந்த மினாராக்கள் தரைமட்டம் முதல் சிகரம் வரை ஒரே சீராகவோ அல்லது கீழிருந்து மேலே செல்லச் செல்ல குறுகலாகவோ அமைப்பதும் உண்டு. அதற்கான உள் கூட்டு பாதையும் மினாராவிற்குள்ளாக அமைக்கப்பெறும். இந்த வகை ஸ்துாபிகளை பள்ளிவாயில்களில் முதன் முறையாக கி.பி. 673இல் பயன்படுத்தியவர் கலிபா முஆவியா என்பவர். இந்தக் கட்டுமானங்களில், வண்ணமும் அழகும் பொருந்தி வழிந்து நிற்பதற்கான புதிய வகையொன்றையும் அவர் ஏற்படுத்தினார். மேலும் கட்டுமான அலங்காரங்களில் மனித, மிருக தோற்றங்களை சேர்த்தல், இசுலாமிய கோட்பாடுகளுக்கு . முரணானதென்ற காரணத்தால் அவைகளை தவிர்ப்பதற்கு வண்ணக் கண்ணாடிகளைப் பதித்து அழகுப்படுத்தும்முறை "மொஸாயிக்” என வழங்கப்பட்டது. இந்த முறை கி. பி. 684ல் அல் ஸூபைர் என்பவரால் புகுத்தப்பட்டது.[3] 
மேலே கண்ட புதிய அமைப்பு முறைகளைக் கொண்ட பள்ளி வாயில்களையும் தர்காக்களையும் தமிழகத்து இஸ்லாமியர் அப்பொழுது பெரும்பான்மையினராக வாழ்ந்த பட்டினங்களில் நிர்மானித்து வந்தனர். ஆனால், அவைகளை இன்று காண்பது அரிதாக உள்ளது. எனினும், காலத்தின் சீற்றத்திற்கும், ஆட்சியாளரின் அழிமானத்திற்கும் அப்பாற்பட்டதாக, இன்றும் நிலைத்துள்ள சில தொன்மையான அமைப்புகளை இங்கு பார்ப்போம். திருச்சிராப்பள்ளியில் உள்ள பழமையான பள்ளிவாசல் ஒன்றில் இஸ்லாமியரின் வில் வளைவுகளைக் காணலாம். இந்தப் 
பள்ளிவாயில் கி. பி. 714ல் நிர்மணிக்கப்பட்டது.[4] திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்திற்கு அண்மையில் இன்று சிதைந்த நிலையில் இந்தப் பள்ளிவாசல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த அமணப் பள்ளியின் வடிவில், மிகவும் சிறியதாக முழுவதும் கல்லினால், அமைக்கப்பட்டுள்ளது. ஹாஜி அப்துல்லா-பின்-ஹாஜி அன்வர் என்பவரால். அப்பொழுது அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த இஸ்லாமியரது வழிபாட்டுத் தலமாக அந்தப்பள்ளி நிர்மாணிக்கப்பட்டதாக தெரிகிறது. இஸ்லாமிய கட்டுமானக் கலையின் ஒரு சிறு பிரதிபலிப்பு இந்தப்பள்ளியின் அமைப்பு என்று இதனைக் கொள்ளலாம்.
இன்னொரு பழமையான பள்ளி, தமிழக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கீட் செம்பி நாட்டு பவித்திர மாணிக்கப் பட்டினத்துக்கீழ்பால் சோனக சாமந்தப்பள்ளி” யாகும். பிற்காலப் பாண்டியரது பேராதரவில் சிறந்து இருந்த சோனகர் ஒருவர் நிர்மாணித்த இந்தப் பள்ளிக்கு, நிவந்தமாக ஆம்புத்துார், மருதுார் முதலிய கிராமங்களை திருப்புவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் என்ற பாண்டியப் பேரரசன் கி.பி. 1276ல் வழங்கிய ஆணையொன்றில் இந்தப் பள்ளி குறிக்கப்பட்டுள்ளது.[5] கொழும்புவிலிருந்து மாலத்தீவு நோக்கி பயணமான உலகப் பயணி இபுனுபதூதாவின் கப்பல் மன்னார் வளைகுடாவில் பாறை ஒன்றில் மோதி பயணம் தடைப்பட்டதால் இராமநாதபுரம் கிழக்கு கரையில் உயிர் தப்பி கரை ஏறினார். பின்னர், மதுரை சுல்தானது உதவியுடன் தனது பயணத்தைத் துவக்குவதற்கு முன்னர் சில நாட்கள் மதுரையிலும் பின்னர் “பவித்திர மாணிக்கப்பட்டினத்திலும்” தங்கினார். கி.பி. 1344ல் இந்தப்பட்டினத்தை அவர் அரபு மொழியில் சுருக்கமாக "பத்தன்" என்று குறிப்பிட்டு இருப்பதுடன் அந்தச் சோனக சாமந்தப்பள்ளியை “முற்றிலும் கல்லாலான அழகிய பள்ளி” என தமது குறிப்புகளில் வரைந்துள்ளார்.[6] இன்றைய திருப்புல்லாணி கிராமத்திற்கு அண்மையில் உள்ள பெரியபட்டினம் என்ற ஊரில் உள்ள கல்லாலான பள்ளியைத் தான், அவர் அங்ஙனம் குறித்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகமாகும். இதற்கு பொருத்தமான பலதடையங்கள் அங்கே உள்ளன.[7] பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில் சிறப்புற்று இருந்த இந்த கடற்துறை, கடந்த ஆறு நூற்றாண்டுகளில், காலக்கோளினால் சிதைந்து பூம்புகாரைப்போன்று சிற்றுாராக சிறுமையுற்றதினால் அங்குள்ள இந்தப் பள்ளி சிதைந்து புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் தொழுகைக்கூடம் மட்டும் அப்படியே இருந்து வருகிறது. அங்கு இடம் பெற்றுள்ள பதினெட்டு கல்தூண்களை மட்டும், ஆதாரமாகக் கொண்டு அந்தப் பள்ளியின் கட்டுமான வகையை கணிப்பது இயலாத ஒன்றாகும். ஆனால் அந்த துண்களின் அமைப்பில் இருந்து அந்தப் பள்ளிவாசல் தொன்மையானது என்பது மட்டும் உறுதியாகிறது.
இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த இன்னும் இரண்டு பள்ளி வாசல்கள் பாண்டியரின் தலைநகரான மதுரையில் உள்ளன. முதலாவது மதுரையின் தென்மேற்கு மூலையில் உள்ள காஜிமார் தெருவில் உள்ள சிறிய தொழுகைப் பள்ளியாகும். பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக் கப்பட்ட தென்றும், இதனைப் பராமரிக்க அந்த மன்னனால் மதுரையை அடுத்துள்ள விரகனுார் புளியங்குளம் வழங்கப்பட் வழங்கப்பட்டுள்ளது. என்றும் தெரிய வருகிறது.[8] பள்ளியின் கட்டுமானம் நீண்ட சதுர வடிவில் திராவிட கட்டுமான பாணியில் அமைக்கப்பட்ட கல்துரண்களுடன் காட்சி அளிக்கிறது. ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்ட பள்ளி சிதைவுற்றதால், அங்கு நாயக்கர் ஆட்சியின் பொழுது இந்தக் கட்டுமானம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும். மற்றது மதுரைப் பெருநகரின், வைகை ஆற்றில் வட கரைக்கு அணித்ததாக உள்ள கோரிப்பாளையம் சுல்தான் அலாவுதீன் அவர்களது தர்காவாகும். கி.பி. 1050ல் மாலிக்-உல் முல்க் என்ற தளபதியுடன் சமயப் பணிக்காக மதுரை வந்த ஹஜரத் சுல்தான் அலாயுத்தீன் என்ற இறை நேசரின் அடக்க இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள கட்டுமானமாகும். இதனை சுல்தான் அலாவுதீன் தர்கா என மக்கள் வழங்கி வருகின்றனர். இஸ்லாமிய கட்டுமான முறையில் கீழே விரிந்து மேலே சுருங்கிய கும்பாஸ் (குப்பா) அமைப்பில் காட்சியளிக்கிறது தரைமட்டத்திலிருந்து இருபத்து இரண்டு அடி உயரத்தில் முடிவு பெறும் இந்த கும்பாஸ் அறுபத்து ஒன்பது அடிகற்றளவில் சுமார் பன்னிரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பாஸ் முழுவதும் ஒரே கல்லால் அமைக்கப்பட்டதாக குறிக்கப்பட்டுள்ளது.[9] இத்தகைய கும்பாஸ் முறை அடக்கவிடங்கள் கீழக்கரை ஜாமியா மஸ்ஜிது பள்ளியின் எதிர்புறத்திலும், ஏறுபதி சுல்தான் இப்ராகீம் ஷஹீது (வலி) அடக்கவிடத்திலும், இராமநாதபுரம் நூர் சாகிப் (வலி) அடக்கவிடத்திலும், புதுக்கோட்டைக்கு அண்மையில் காட்டுபாவா சாகிபு அடக்க விடத்திலும் உள்ளன. மற்றும் தொண்டி திறப்புக்காரர் தர்கா, புனித சேகு அபுபக்கர் சாயபு, முத்துராமலிங்கப்பட்டினம் புனித சையது முகம்மது சாயபு, பாசிப்பட்டினம் புனித நெய்னா முகம்மது சாகிபு தர்கா, கோட்டைப்பட்டினம் புனித ராவுத்தர் சாயபு. முத்துப்பட்டினம் புனித சேகு தாவுது, அதிராம் பட்டினம் புனித ஹாஜா அலாவுதீன் அடக்க இடங்களும் கும்பாஸ் முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் இவை பிற்காலத்தில் - சுமார் மூன்று நூற்றாண்டு கால இடைவெளியில் நிர்மாணிக்கப் பட்டவை. அடுத்து, காயல்பட்டினத்தில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசல் அமைப்பும் தமிழக இஸ்லாமியரது தொன்மையான அமைப்பில் ஒன்றாகும். இந்தப்பள்ளி முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. சதுர வடிவில் உள்ள இந்தப்பள்ளியில் வளைவுகளோ, கும்பாஸ் விதானங்களோ, மினரட்டுகளோ இல்லாமல் எளிமையாக அழகுடன் காட்சியளிக்கிறது. காயலில் பாண்டியன் மாறவர்மன் குலசேகரனது (கி.பி. 1274-1310) பேரவையில் பிரதான அலுவலராக விளங்கிய பெரு வணிகர் சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரால் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டதாகும், அவர், அரபு நாட்டில் இருந்து காயல்பட்டினத்தில் குடியேறியவரானாலும். அப்பொழுதைய நடைமுறையில் இருந்த "மூரிஸ்" 
முறையைப்பின்பற்றி இந்தப் பள்ளியை அமைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் புலனாகவில்லை.
மற்றும், இராமேஸ்வரத்தில் உள்ள தொழுகைப்பள்ளி, வரலாற்றுதொன்மை வாய்ந்தது ஆகும். இதனை கி.பி. 1311 ல் தென்னக படையெடுப்பின் இறுதி நிகழ்ச்சி என குறிப்பிடத்தக்க வகையில் தில்லி பேரரசர் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் அமைத்தார்.[10] கி. பி. 1318 ல் அங்கு மற்றொரு படையெடுப்பிற்கு தலைமை தாங்கிச் சென்று தில்லி திரும்பிய தளபதி குஸ்ருகான் அந்த பள்ளியில் மராமத்து பணிகளை மேற்கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது.[11] இந்தச் சிறு பள்ளிவாயில் முழுவதும் கல்லினால் அமைக்கப்பட்டு நீண்ட சதுர வடிவில் உள்ளது. வழிபாட்டு பேரவையை உள்ளடக்கியதாக முகப்பிலும் தெற்கிலும் வடக்கிலுமாக நீண்ட பத்திகளுடன் விளங்குகிறது. இன்ன பாணியிலான கட்டுமானம் எனக் குறிப்பிடும் வகையில் அங்கு எவ்வித நுணுக்கமான வெளிப்பாடுகள் எதுவும் இல்லை. தளபதி மாலிக்காபூரின் படையெடுப்பின் பொழுது, சுருங்கிய காலததில் அவசரப்பணியாக இந்தக் கட்டுமானத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே இதற்கு தெளிவான விடை. அடுத்து, குறிப்பிடப்பட வேண்டிய பள்ளி, கீமுக்கரையில் உள்ள ஜாமியா மஸ்ஜிது என அழைக்கப்படும் தொழுகைப் பள்ளியாகும். அங்கு தொழுகைப் பள்ளிகள் பல இருந்த பொழுதிலும், வரலாற்றுச் சிறப்பும் கட்டுமானச் செறிவும் கலந்து விளங்குவது - இந்த பள்ளிவாசல் ஒன்றேதான். ஏன் தமிழகத்திலேயே இத்தகைய கலைப் பேழையாக விளங்கும் பள்ளிவாசலை வேறு எங்கும் காண முடியாது! பதினேழாம் நூற்றாண்டின் திராவிட கட்டுமான பணிக்கு கட்டியம் கூறும் இந்தக் கலைப் படைப்பை இஸ்லாமிய உலகிற்கு காணிக்கையாகத் தந்தவர் காலமெல்லாம் புகழப்படுகிற வள்ளல் சீதக்காதி என்ற ஷெய்கு அப்துல் காதர் மரைக்காயரும் அவரது இளவல் பட்டத்து அபுபக்கர் மரக்காயரும் ஆவர். நீண்ட சதுர வடிவில் நான்கு சுவர்களும், இருபத்து நான்கு தூண்களும், விதானமும் - அனைத்தும் நல்ல வெள்ளைப்பாறைக் கல்லால் வடிவமைக்கப்பட்டு விளங்குகின்றன. ஆலயங்களில் உள்ள திருச்சுற்றாலை போன்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த அமைப்பில், சிற்பிகளின் கைத்திறன் சிற்றுாண்கள் சாளரம், அனைத்திலும் கனிந்து ஒளிர்கின்றது. இவைகளில் இஸ்லாமிய சமய 
கோட்பாடுகளுக்கு இணங்க உருவங்கள் எதுவும் இல்லாமல் மலர்கள், கொடிகளுடன் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
வரலாற்றுத் தொடர்புடைய இன்னொரு இஸ்லாமிய கட்டுமானம் நாகூரில் உள்ள புனித சாகுல்ஹமீது ஆண்டகையின் அடக்க இடமாகும். இந்த இறைநேசரிடம் முழுமையாக, ஆன்ம பூர்வமாக ஈடுபட்டு, அடிமையாகிவிட்ட, தஞ்சை மன்னர் பிரதாபசிங், இந்தக் கட்டிடத்தை நிலையான அன்புக் காணிக்கையாக அமைத்து முடித்து இருக்கிறார். அங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்றிலிருந்து இந்தக் கட்டுமானம் முழுவதும் பதினேழு நாட்களில் கி.பி. 1757 ல் அமைத்து முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.[12] இவ்வளவு குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பிரமாண்டமான கட்டுமானத்தில் கலை நுணுக்கமான உத்தி எதனையும் எதிர்பார்த்தல் இயலாத ஒன்று. என்றாலும், இந்த தர்காவை ஒட்டி எழுப்பட்டுள்ள ஏழு கொடி மாடங்களும் தமிழக கட்டுமானக் கலைக்கு புதுமையானவை. உலகில் இத்தகைய கொடி மாடங்கள் முதன்முறையாக ஸிரிய நாட்டில், ஏழாவது எட்டாவது நூற்றாண்டுகளில் கண்காணிப்பு மேடை போன்று உயரமாக எழுப்பப்பட்டன.[13] அதனையொட்டி, பின்னர் கிறிஸ்தவ தேவலாயங்களில் சதுர வடிவில் மணிக் கூண்டுகளாக, உயரமாக அமைக்கப்பட்டன. பிற்கால இஸ்லாமிய கட்டுமான அமைப்பான 'மினாரா'க்களுக்கு இத்தகைய கட்டுமானமே முன்னோடியாகும்.
பத்தொன்பது நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய கட்டுமானங்களில் மீண்டும் இஸ்லாமிய உத்திகள் தேங்கி மிளிர்கின்றன. காரணம் அப்பொழுது தமிழகத்தில் பெரும்பகுதி ஆற்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தில் இருந்தது. அதனால் அரசியல் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அந்த கட்டுமானங்களில் இஸ்லாமிய உத்திகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அவைகளை நன்கு அறிந்து இருந்த சிற்பிகளும், கல்தச்சர்களும் அப்பொழுது தமிழகத்தில் ஏராளமாக இருந்தனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆற்காட்டு நவாப் மாளிகை போன்ற ஒரிரு கட்டுமானத் தொகுதிகளைத் தவிர ஏனையவை அனைத்தும் இறைவழிபாட்டிற்காக ஆங்காங்கு அமைக்கப்பட்ட தொழுகைப் பள்ளிகளாகும். சென்னைப் பெருநகரிலும், தஞ்சை, திருச்சிராப் பள்ளி, மதுரை, இராமநாதபுரம் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழுகைப் பள்ளிகள் இந்தக் கால கட்டத்தையும், வகையையும் சேர்ந்தவையாகும்:
இன்னொரு அற்புதமான படைப்பு காயல்பட்டினத்தில் உள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் காணப் பெறாத இஸ்லாமிய கட்டுமான கலைச் சின்னத்தை கி.பி. 1865ல் பாக்தாத் மெளலானா என அழைக்கப்பட்ட சமயச் சான்றோர் நிர்மானித்துள்ளார். பாக்தாத்திலிருந்து காயல்பட்டினத்திற்கு குடிபெயர்ந்த அவர் அந்தக்கால கட்டத்தில் சுமார் நாற்பதினாயிரம் ரூபாய் செலவில் ஆறு வருட காலத்தில் இதனை கட்டி முடித்துள்ளார்.[14] இஸ்லாமியரின் ஞான மார்க்கமான காதரியா தர்க்காவை பின்பற்றுபவர்கள், ஒன்று கூடி அமர்ந்து திவ்விய நாம பாராயணம் (திக்ரு) செய்வதற்குப் பயன்படும் பொது மண்டபமாக இதனை அமைத்தார்.
தமிழக கட்டுமானக் கலையில் முழுமையான இஸ்லாமியப் பகுப்பினைப் பறைசாற்றும் பாணியில் விளங்குகின்ற இந்த வில் விதமான மண்டபம், நாற்பத்து இரண்டு அடி உயரமும் நூற்று இருப்பத்தாறு அடி உட்புறச் சுற்றளவும் கொண்டதாக கவிக்கப்பட்ட தேங்காய் மூடி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. உட்புறத்தில் எவ்வித விட்டங்களோ, சட்டங்களோ பயன்படுத்தாமல் "கும்பாஸ்", அமைப்பாக உள்ள இதனை "மஹ்ழறா" என அழைத்து வருகின்றனர். கூடும் இடம் என்ற பொருளில் உள்ள அரபுச் சொல்லான மஹ்ழறா.[15] தமிழில் வழங்கப்படுகிற பல அரபுச் சொற்களைப் போன்று இந்த கட்டுமானமும் அரபுச் சொல்லில் மாற்றம் இல்லாமல், அப்படியே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள் தொழுகைப் பள்ளிவாசல் மட்டும் மேலே கண்ட பகுப்புகளில் வரையறுக்க முடியாததாகும். காரணம் இந்தப் பள்ளிவாசலை நிர்மாணித்தவர், மைசூர் அரசரது ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்து வந்த அந்தப் பாளையத்தின் ஆளுநகராக விளங்கிய செய்யது சாகிபின் மனைவியும் திப்பு சுல்தானின் அத்தையுமான அம்ருன்னிஸா பேகத்தின் நினைவாக அந்த தர்காவும் தொழுகைப் பள்ளியும் நிர்மானிக்கப்பட்டது. அவைகளின் பராமரிப்பிற்காக 360 ஏக்கர் கொண்ட நிலத்தையும் மேட்டுப்பட்டி கிராமத்தையும் மன்னர் திப்புசுல்தான் அளித்தார்.[16] இந்தப் பள்ளியும் இஸ்லாமிய கட்டுமானத்திற்கு ஏற்றதொரு எடுத்துக் காட்டாக எளிய அழகிய மிடுக்கான தோற்றத்துடன் விளங்குகிறது.
இந்தக்கால கட்டத்தைச் சேர்ந்த இன்னொரு பழமையான அமைப்பு சென்னைப் பெருநகரில் சேப்பாக்கம் கடற்ரையோரம் உள்ள நவாப் வாலாஜா முகம்மது அலியின் மாளிகை ஆகும். ஆற்காட்டிலிருந்து தமது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்ட நவாப் முகம்மது அலி அப்பொழுது சென்னைக் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயரின் பண்டகசாலையினையும் கோட்டையையும் அடுத்து கி.பி. 1763ல் இந்த அழகு மாளிகையை அமைத்தார்.[17] பற்பல தொகுதிகளான கட்டிடங்களையும் பூங்கா, நீச்சல்குளம் ஆகியவைகளுடன் விளங்கிய இந்த மாளிகை, ஆங்கிலேயரது ஆட்சியில் அழிமானம் எய்தியது. ஆனால் கால்சா மகால், ஹீமாயூன் மகால், திவானே கான்வாரா ஆகிய பகுதிகள் மட்டும் எஞ்சி நின்று இந்த நாட்டின் பாரம்பரிய கலைக்கு பல்லாண்டு பாடிக் கொண்டிருக்கிறது.
கி. பி. 1801 ல் ஆற்காட்டு நவாப்பினது ஆட்சியை தமிழக வரலாற்றில் இருந்து 
அகற்றி விட்டு, தமிழக நிர்வாகத்தினை நடத்திய ஆங்கிலப் பேரரசின் பிரதிநிதிகளாக கிழக்கிந்திய கம்பெனியார், தங்களது ஆட்சியின் பொழுது, சில பொதுக் 
கட்டுமானங்களை அமைத்தனர். கட்ந்த கால ஆடம்பரத்தையும் நிகழ்காலத் தேவையையும் உள்ளடக்கியதாக அவை அழகுடன் மிளிர்கின்றன. குறிப்பாக, சென்னை தலைமை நீதி மன்றம், கோவை விவசாயக் கல்லூரி, மதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியன இவை அனைத்திலும் இஸ்லாமிய கட்டுமானப்பகுப்புகளான வில்வளைவு, உள்ளொடுங்கிய விதானம், சாய்ந்த, வளைந்த படிக்கட்டுக்கள் சிறு மினாராக்கள் போன்றவைகளை, பல அளவுகளிலும், முறைகளிலும் பயன்படுத்தி அழகு ஊட்டி உள்ளனர்.
இத்தகைய இஸ்லாமிய கட்டுமானக் கலை ஊடுருவலினால் தமிழக கட்டுமானக் கலையின் தொன்மையும், அழகும், கம்பீரமும், புதிய பரிணாமங்களில் பிரதிபலித்து நின்றன. கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகளது சிந்தனையும், செயல் திறனும் இந்தப் புதிய கலப்பினால் வளர்ந்து முதிர்ச்சி பெற்றுள்ளன. இந்த வளர்ச்சி மனித நாகரீகத்திற்கும் பண்பாட்டிற்கும் தொடர்ந்து பலனளிைக்கும். அது போழ்து கடந்த பற்பல நூற்றாண்டுகளாக, மனித ஆற்றலும், அழகுணர்வும் கலந்து மலர்ந்துள்ள பிரம்மாண்டமாள் கட்டுமானங்களின் கவிதை ஒலியில், இறைவனது சாந்திமார்க்கமான இஸ்லாத்தின் இதய துடிப்பும் எதிரொலிக்கும். 

 

↑ கம்பராமாயணம் - சுந்தர காண்டம் - ஊர் தேடு படலம். பாடல் எண். 112 (207)

↑ Philip K. Kitti – History of Arabs (1977) p. 265

↑ பிறையன்பன் - கலையும் பண்பாடும் (1962) பக் 99

↑ ஹமீது கே.பி.எஸ். - இரண்டாவது இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் (1973) பக். 308 310

↑  A.R. 116/1903 திருப்புல்லானி.

↑ Nilakanta Sastri-Foreign Notices of South. India (1972)р. 281.

↑ கமால் எஸ்.எம். - தமிழக வரலாற்று கருத்தரங்கு (1978)பக்கம் : 308 : 310

↑  Hussaini S.A.O. Dr. History of Pandia Kingdom (1952) p. 55 

↑ Hursaini. S. A. Dr – History of Pandiya Kingdom (1952)

↑  Krishnasami Ayyangar Dr. S. - Soulth India and her Mohammedan Invaders (1924)

↑ Elphinstone – History of India p. 340

↑ Sewell - List of Copper plates

↑ Philips H. Kitty-History of the Arabs (1972) p. 265

↑ சையது அஹமது எம்.கே. ஹாபிஸ் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கட்டுரைக்கோவை (1978) பக் 234

↑ Ibld

↑ Board’s Misc. Register. 1811.

↑ “The Hindu” (3.9.1963) Former Residence of Nawab of Arcot

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel