←← 63. எலும்பு முறிவு

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்64. வாழ்க்கை நிறைவு

65. உரைநடை →→

 

 

 

 

 


440051தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 64. வாழ்க்கை நிறைவுகி. வா. ஜகந்நாதன்

 

 


வாழ்க்கை நிறைவு


திருக்கழுக்குன்றத்தில் அப்போது ஆசிரியருக்கு ஜூரம் உண்டாயிருந்தது. இவருடைய குமாரர் அருகில் இல்லை. சென்னைக்குச் சென்றிருந்தார். அவருக்குத் தந்தி அடித்தார்கள். ஆனால் அவர் வருவதற்குள் ஆசிரியப் பெருமான் இறைவன் திருவடியை அடைந்துவிட்டார். இவரது இறுதிக் காலத்தில் அவருடன் நாம் இருக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கும் இவருடைய குமாரருக்கும் இருந்தது. தமிழ் தமிழ் என்பதே மூச்சாக வாழ்ந்த ஆசிரியப் பெருமான் தம் கடைசிக் காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் தம் வாழ்வின் நிறைவை எய்தினார்.
தமிழ்நாடு முழுவதும் இவர் பிரிவுக்கு இரங்கியது. என்னைப் பெற்ற தந்தையையும், அறிவு ஊட்டி வளர்த்த தந்தையையும் ஒரு சேர இழந்த எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
என்னுடைய ஆசிரியப் பெருமானின் உழைப்பெல்லாம் தமிழ் வளர்ச்சிக்கு எத்தனை பயன்பட்டுள்ளது என்பதைத் தமிழ் உலகம் இன்று நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறது. இவர் பெயரால் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் அமைக்கப்பெற்ற நூல் நிலையம் ஒன்று இன்று திருவான்மியூரில் இருக்கிறது. ஆசிரியப் பெருமான் சேகரித்த சுவடிகளும், புத்தகங்களும் அங்கே காப்பாற்றப்பெற்று வருகின்றன. 
தமிழ்நாடு பாக்கியம் செய்தமையால் ஆசிரியப் பெருமான் திரு அவதாரம் செய்தார். இறைவன் இவருக்கு 87 ஆண்டு நீண்ட ஆயுளைக் கொடுத்தான். இவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தமிழுக்காகவே பாடுபட்டார். தமிழ் அன்னையை மீண்டும் பழைய நிலையில் இருக்கச் செய்தார். பழைய அணிகளைச் செப்பம் செய்து அணிந்ததோடு புதிய உரைநடையிலும் அவளை எழில் கொழிக்கச் செய்தார். தமிழ் உலகம் தம் ஆசிரியரை நன்கு அறிந்துகொள்ளும் படி அவரது வரலாற்றை வெளியிட்டார். பல புலவர் பெருமக்களின் வரலாற்றை வெளியிட்டார். பழைய சங்க  இலக்கியங்கள் எல்லாம் இன்றைக்கு மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன என்றால் இதற்கெல்லாம் மூலகாரணம் இந்தத் தமிழ்ப் பெருமகனார் செய்த தொண்டுதான். இன்று உலகம் முழுவதும் தமிழ் மொழியைப்பற்றிப் பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடைபெறுகின்றன என்றால், அதற்கு முக்கியமான காரணம் இந்தப் பெருமகனார் செய்துள்ள தமிழ்ப் பணியே என்பதை யாரும் மறக்கமாட்டார்கள். பாரதியார்,

 

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
        காலமெலாம் புலவோர் வாயில் 
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
        இறப்பின்றித் துலங்கு வாயே!


 
என்று பாடியபடி தமிழர்களின் நெஞ்சில் என்றைக்கும் இந்தப் பெருமகனார் வாழ்வார் என்பது திண்ணம்! 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel