←ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள்

ii. சில முக்கிய நிகழ்வுகள்→

 

 

 

 

 


418971சேதுபதி மன்னர் வரலாறு — i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள்எஸ். எம். கமால்

 

இயல் - X1 ஜமீன்தாரி முறையின் சுவடுகள்
தன்னரசு நிலையிலிருந்து தாழ்வு பெற்ற மறவர் சீமைக்கு ஆங்கில ஏகாதிபத்திய வாதிகள் அளித்த பரிசான ஜமீன்தாரி முறை சேது நாட்டு மக்களது அன்றாட வாழ்க்கையை மேலும் பாதித்தது என்றால் மிகையாகாது. வரலாற்றில் மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்த கிரேக்க ரோமப் பேரரசுகள் அழிந்தபொழுது அன்றைய காலகட்டத்தில் அந்த நாட்டு மக்கள் அடைந்திராத அவலங்களை இந்த நாட்டு மக்கள் அனுபவித்தனர். இந்த நாட்டின் ஒரே ஒரு தொழிலாக விளங்கிய விவசாயம் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதால் இங்குள்ள குடிமக்கள் காலத்தே பெய்யும் பருவ மழைப் பெருக்கைப் பழுதடைந்துள்ள கண்மாய்களில் தேக்கி வைத்து விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர். பண்டைய காலம் தொட்டு அரசுக்குச் செலுத்தி வந்த விளை பொருளின் மீதான ஆறில் ஒரு பகுதிக்குப் பதில் விவசாயியும் அரசும் சரிசமானமாக விளைச்சலைப் பங்கிட்டுக் கொள்ளும் முறை தொடர்ந்தது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு அரிசி மிஞ்சாது என்ற பழமொழி உண்மையாகி விட்டது. மிகுதியாக விளைந்த விளை பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலும் பல சிரமங்கள் தோன்றின. சாலைப் போக்கு வரத்து சிரமம் ஆற்காட்டு வெள்ளி ரூபாய், பரங்கியரது பக்கோடா பணம் ஆகியவைகளுக்கு ஈடாகச் சேது மன்னர்களது பழைய பொன், வெள்ளி நாணயங்களை மாற்றிக் கொள்ளும் வசதிகளும் ஆங்காங்கு ஏற்படவில்லை. மேலும் இந்த நாட்டின் மற்றொரு சிறந்த தொழிலான நெசவுத் தொழிலும் நசித்துப் போய் நெசவாளிகள் பட்டினியும் பசியுமாக வாடவேண்டிய சூழ்நிலை - சேது மன்னர்களது ஆட்சிக்காலத்தில் கைத்தொழிலுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தறிக்கடமை என்ற தீர்வைக்குப் பதிலாக நெசவாளிகள் தயாரித்த ஒவ்வொரு மடித் துணிக்கும் தனித்தனியாகப் பரங்கியருக்குச் செலுத்த வேண்டிய தீர்வையின் சுமை அதிகரித்து வந்தது.
இவை தவிர ஆங்காங்கு பழைய தமிழ்ப் புலவர்களது வழியினரால் நடத்தப்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கு வேற்று நாட்டு அரசின் ஆதரவு இல்லாததால் அவைகளை மூடவேண்டிய கட்டாயச் சூழ்நிலை. இன்னும் மருத்துவ வசதி, சாலை வசதி போன்ற இன்றியமையாத உதவிகளையும் ஆங்கில அரசு செய்ய முன் வரவில்லை. அவர்களது ஒரே பணி விவசாய மக்களிடமிருந்து தீர்வையைச் சரிவர வசூலிப்பது மட்டும் குறிக்கோளாக இருந்தது. கி.பி. 1940, 45-ல் தேசிய இயக்கம் விறுவிறுப்பு அடைந்த நிலையில் இன்றைய தேசிய காங்கிரஸ் சென்னை மாகாணத்திலுள்ள ஜமீன்தாரி பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற விவசாயிகளது இடர்பாடுகளை ஆய்வு செய்வதற்கு ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலுவின் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவின் ஒருமித்த முடிவுப்படி கி.பி. 1947-ல் இந்திய தேசிய காங்கிரஸினர் சென்னை மாநில ஆட்சியை முதன்முறையாக கைப்பற்றியவுடன் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினர்.
இந்தச் சட்டத்தின் மூலம் உழைப்பவருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. ஆனால் சேது மன்னர்கள் ஆட்சியில் வழங்கப்பட்ட பல சலுகைகள் குடிமக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. சமுதாயப் பணிகள், ஆன்மீகத் தொண்டுகள், தமிழ்மொழி வளர்ச்சி, நாட்டுப்புறக் கலைஞர்களது நலிவை நீக்கி அவர்களது கலைத்திறனை ஊக்குவித்தல் போன்ற இலக்குகள் இனிமேல் தான் எட்டப்பட வேண்டும்.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel