←viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி
i. ஜமீன்தாரி முறையின் ஆட்சியின் சுவடுகள்→
418970சேதுபதி மன்னர் வரலாறு — ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதிஎஸ். எம். கமால்
IX சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி
1944-ல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் ஆட்சிகாலம் ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வந்த 1948-ஆம் வருடத்துடன் முடிவடைந்தது. தமிழக வரலாற்றில் இராமநாதபுரம் சமஸ்தானம் என்று மிகச் சிறப்பாக முந்தைய நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களது தன்னரசு வளமையிலும், பரப்பிலும் குறுகி புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் எனப் பிரிவினை பெற்றுப் பின்னர் ஜமீன்தாரியாகி வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டது ஒரு சோக நிகழ்ச்சியாகும்.
இந்தக் கடைசி மன்னர் அரசியலிலும் ஈடுபட்டு இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராகவும், பின்னர் 1952-லிருந்து 1967 வரை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற இராமநாதபுரம் தொகுதி உறுப்பினராகவும், 1952 - 57 வரை ராஜாஜி, காமராசர் ஆகியோர் அமைச்சரவைகளில் முறையே விளையாட்டுத் துறை, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும், இறுதிவரை இருந்தார். இவர் இசைப்பிரியர். இவர் ஒரு விளையாட்டு வீரர். கிரிக்கெட், டென்னிஸ், குதிரை ஏற்றத்தில் கைதேர்ந்தவர். சென்னை பந்தயக் குதிரைக்காரர்களது சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். இவர் 1967-ல் காலமானார். இவரது ஆட்சியில் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே 18 கல் தொலைவில் வைகை ஆற்றிலிருந்து இராமநாதபுரம் நகருக்குக் குடிநீர் குழாய் வசதிக்கு ஏற்பாடு செய்தார். இராமநாதபுரம் நகருக்கு தெற்கே திருப்புல்லாணி அருகிலும் வடக்கே இராஜசிங்கமங்கலம் அருகிலும் மேற்கே லாந்தை அருகிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய பாலங்கள் அமைப்பதற்கு உதவினார். அவர் பயின்ற மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரியிலும் இராமநாதபுரம் மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும் பெரிய அறிவியல் கூடங்களை அமைக்கவும் உதவி செய்தார். இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கல்லூரி இவரது நன்கொடையில் அமைக்கப்பட்டது.