←iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி
சேதுபதி மன்னர் வரலாறு ஆசிரியர் எஸ். எம். கமால்இயல் III திருமலை ரெகுநாத சேதுபதி
இயல் IV இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி→
418944சேதுபதி மன்னர் வரலாறு — இயல் III திருமலை ரெகுநாத சேதுபதிஎஸ். எம். கமால்
இயல் - IIIதிருமலை ரெகுநாத சேதுபதி
தளவாய் இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆண்வாரிசு இல்லாமல் இறந்து போனதால் சேதுநாட்டின் அரசுரிமை யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. சேதுபதிப் பட்டத்திற்கு மறைந்த மன்னரான தளவாய் சேதுபதியின் தங்கை மக்களான தனுக்காத்த தேவர், நாராயணத் தேவர், திருமலைத் தேவர் ஆகிய மூவர்களில் ஒருவரை சேது மன்னர் ஆக்குவதற்கு அரண்மனை முதியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித்தேவர் மதுரை மன்னர் திருமலை நாயக்க மன்னரை மீண்டும் அணுகி சேதுநாட்டிற்குத் தம்மை மன்னராக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே மறவர் சீமையைத் தமதாக்கிக் கொள்ள முயன்ற திருமலை நாயக்க மன்னர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள சேதுநாட்டு அரசியலில் தலையிட்டார். தம்பித் தேவரையும் அவரது எதிர்த் தரப்பினரான தனுக்காத்த தேவர் முதலியோரையும் கலந்து ஆலோசித்து அவரது முடிவினை அவர்களிடம் தெரிவித்தார். இதன்படி ஏற்கனவே காளையார் கோவில் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த தம்பித் தேவருக்கு அந்தப் பகுதியினை ஆளும் உரிமையினையும், தனுக்காத்த தேவருக்கு சேதுநாட்டின் வடகிழக்குப் பகுதியான அஞ்சுகோட்டை பகுதியையும், திருமலை ரெகுநாதத் தேவர் இராமநாதபுரம் கோட்டை உள்ளிட்ட தென் பகுதியையும் ஆள வேண்டும் என்பதுதான் திருமலை நாயக்கரது தீர்ப்பு ஆணைத் திட்டம். வலிமையுடனும், ஐக்கியத்துடனும் ஒன்றுபட்ட சேதுநாட்டை இந்த மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்வதன் மூலம் திருமலை நாயக்க மன்னரது இரகசிய திட்டத்திற்கு ஏற்ப இந்தப் பிரிவினை அமைந்தது.
இராமேஸ்வரம் போரினால் பலத்த பொருளாதாரச் சிதைவும் பொதுமக்களுக்குப் பலவிதமான சிரமங்களும் ஏற்பட்டிருந்த நிலையில் மேலும் இரத்தக்களரியையும், குழப்பத்தையும் தவிர்க்கும் வகையில் திருமலை நாயக்க மன்னரது தீர்ப்பினை மூவரும் ஏற்றுக்கொண்டு முறையே காளையார் கோவிலிலும், அஞ்சுக்கோட்டையிலும். போகலூரிலும் தங்களது ஆட்சியினை அந்த மூவரும் தொடங்கினார்கள். ஆனால் திருமலை நாயக்க மன்னருக்கு ஏமாற்றம் தரும் வகையில் சேதுநாட்டில் அரசியல் நிகழ்ச்சிகள் அமைந்தன. காளையார் கோவிலில் தம்பித்தேவரும், அஞ்சுக்கோட்டையில் தனுக்காத்தத் தேவரும் அடுத்தடுத்து, காலமானார்கள். அவர்களுக்கு உரிய வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அந்த இரு பகுதிகளும் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிப்பகுதியாக அமைந்து சேது நாட்டின் புகழினைப் பரப்பும் வாய்ப்பாக அமைந்தது.
இப்பொழுது மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கு அடுத்தடுத்து பல சோதனைகள எழுந்தன. முதலாவதாக அந்த மன்னரது எழுபத்து இரண்டு பாளையக்காரர்களில் ஒருவரான எட்டையபுரத்துப் பாளையக்காரர் மதுரை மன்னருக்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் சில பாளையக்காரர்களைத் திரட்டி திருமலை நாயக்கருக்கு எதிராகக் கலகக்கொடி உயர்த்தினார். மதுரை நாயக்க அரசினால் பாளையக்காரர் பதவியைப் பெற்ற எட்டயபுரம் பாளையக்காரர் உள்ளிட்ட தெற்கத்திய பாளையக்காரர்கள் இத்தகைய இக்கட்டான நிலையை உருவாக்கக் கூடும் என்பதைச் சிறிதும் எதிர்பாராத திருமலை நாயக்க மன்னர் செய்வது அறியாது திகைத்தார். முடிவில் ஒருவாறாகத் தேறுதல் பெற்றுச் சேதுபதி மன்னரை அணுகினார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்ற பொதுமறைக்கு ஏற்ப மதுரை மன்னர் சேதுநாட்டிற்கு இழைத்த தீங்குகளை மறந்து சேதுபதி மன்னர் மதுரை மன்னருக்கு உதவச் சென்றார்.
மதுரை மீது கன்னடியர் படையெடுப்பு
எட்டயபுரம் பாளையக்காரரையும் அவரது கூட்டணியையும் முறியடித்து எட்டையபுரம் பாளையக்காரரைக் கைது செய்து மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் நிறுத்தினார்.
அடுத்து கி.பி. 1658ல் திருமலைநாயக்கர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் மைசூரிலிருந்து மாபெரும் கன்னடப் படையொன்று மதுரை நோக்கி வருவதாகச் செய்திகள் கிடைத்தன. மதுரையைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் மூன்றாவது முறையாகக் கன்னடப்படைகள் மதுரை நோக்கி வந்தன. இந்த மோசமான நிலையில் மதுரைப் படைகளுக்குத் தலைமை வகித்துக் கன்னடியர்களை வெற்றி கொள்வது யார்? தமது பாளையக்காரர்களில் வலிமை மிக்க ஒருவரை வடுகரை இந்தப் போரினை நடத்துமாறு பணித்தால். போரில் அவர் வெற்றி பெற்றுத் திரும்பினால் தமக்கு எதிராக மதுரையை ஆள நினைத்தால்...? இந்த வினாக்களுக்கு விடை காண முடியாமல் தத்தளித்த மதுரை மன்னர் சேதுபதி மன்னரை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார். மதுரை மன்னரது பரிதாப நிலைக்கு இரக்கப்பட்ட திருமலை ரெகுநாத சேதுபதி 15,000 மறவர்களுடன் மதுரைக்கு விரைந்தார். மதுரைப் படைகளுக்குத் தலைமையேற்றுச் சென்று கன்னடப் படைகளை அம்மைய நாயக்கனுரை அடுத்த பரந்த வெளியில் கன்னடியரின் பிரம்மாண்டமான படை அணிகளைத்தாக்கி அழித்து வெற்றி கொண்டார்.[1] வெற்றிச் செய்தியினை அறிந்த மதுரை மன்னர் மதுரைக் கோட்டையில் திருமலை ரெகுநாத சேதுபதிக்கு மிகச் சிறந்த வரவேற்பினை வழங்கிப் பரிசுப் பொருள்களையும் அளித்துப் பாராட்டினார். மேலும் சேது நாட்டின் தென்மேற்கே உள்ள திருச்சுழியல், பள்ளி மடம், திருப்புவனம் ஆகிய மதுரை அரசின் பகுதிகளையும் அன்பளிப்பாக வழங்கிச் சிறப்பித்தார். மேலும் ஆண்டுதோறும் புரட்டாசித் திங்களில் மதுரை மாநகரில் திருமலைநாயக்க மன்னர் நடத்தி வந்த நவராத்திரி விழாவினைச் சேது நாட்டிலும் நடத்தி வருமாறு சொன்னதுடன் அந்த விழாவிற்கு மூலமாக அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மனின் பொன்னாலான சிலை ஒன்றினையும் சேதுபதி மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
சேதுநாட்டில் நவராத்திரி விழா
வெற்றி வீரராகத் திரும்பிய திருமலை சேதுபதி மன்னர் அந்த அம்மன் சிலையினை இராமநாதபுரம் கோட்டையில் அரண்மனை வளாகத்தில் பிரதிஷ்டை செய்து அந்த ஆண்டு முதல் நவராத்திரி விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.[2] இத்தகைய வெற்றிகளினால் புதிய சிந்தனையும், புது வலிமையும் பெற்ற ரெகுநாத சேதுபதிமன்னர் பல அரிய செயல்களைச் செய்வதற்கு முனைந்தார்.
சேதுநாட்டின் எல்லைப் பெருக்கம்
முதலாவதாகச் சேதுபதி மன்னர் உள்ளிட்ட செம்பிநாட்டு மறவர்களது பூர்வீகப் பகுதியான சோழ மண்டலத்தின் வடக்கு. வடகிழக்குப் பகுதியினையும் சேதுநாட்டின் பகுதியாக்கத் திட்டமிட்டார். அதனையடுத்துச் சேதுநாட்டின் வடபகுதி கிழக்குக் கடற்கரை வழியாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டைச் சீமைகளைக் கடந்து திருவாரூர்ச் சீமை, கள்ளர் சீமை ஆகியவைகளையும் சேதுநாட்டில் இணைத்துச் சேதுநாட்டின் பரப்பை விரிவுபடுத்தினார்.
இவ்விதம் சேதுநாட்டின் எல்லைகளை விரிவு அடையுமாறு செய்த சேது மன்னர் எஞ்சிய தமது காலத்தை ஆன்மீகத்தை வளர்ப்பதிலும் தமது நாட்டு குடிமக்களிடையே நல்லிணக்கமும் சமரச மனப்பான்மையும் வளர்வதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
கோயில் திருப்பணிகள்
இவரது முன்னோரான சடைக்கன் உடையான் சேதுபதி, கூத்தன் சேதுபதி, இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆகியோர் சிறப்புக் கவனம் செலுத்தியதைப் போன்று இந்த மன்னரும் இராமேஸ்வரம் கோயில் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டினார். குறிப்பாக அந்தக் கோயிலின் ஏற்றத்திற்கும், தோற்றத்திற்கும் ஏதுவாக அமைந்துள்ள நீண்ட விசாலமான இரண்டாவது பிரகாரத்தினை அமைக்க முடிவு செய்தார். இந்தக் கோயில் மணற்பாங்கான பகுதியில் அமைந்து நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள தீவாக இருப்பதால் பிரகாரத்தின் கட்டுமானத்திற்கான கற்களைத் திருச்சி, மதுரை, நெல்லை சீமைகளின் குன்றுப் பகுதிகளில் இருந்து எவ்விதம் கொண்டு சேர்ப்பது? நீண்ட தொலைவில் இருந்து எவ்விதம் கொண்டு சேர்ப்பது? நீண்ட் தொலைவில் இருந்து பார வண்டிகளில் ஏற்றி எதிர்க்ரையான மண்டபம் தோணித்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தாலும் அவைகளைக் கடலைக் கடந்து இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பது எப்படி? இந்த வினாக்களுக்கான விடைகளைப் பல நாட்கள் சிந்தித்த பிறகு சேது மன்னர் கண்டுபிடித்தார். கோயில் திருப்பணிக்குத் தேவையான கற்களைத் தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் இருந்து வெட்டிக்கொண்டு வந்து சேர்ப்பதற்குப் பதிலாக, கல் தச்சர்களையும், ஸ்தபதிகளையும் எதிர்க்கரையில் உள்ள இலங்கை நாட்டின் மலையிலிருந்து வெட்டிச் செதுக்கிக் கொண்டு வருவது என முடிவு செய்து அதற்குத் தேவையான அரசு அனுமதியைக் கண்டியில் உள்ள இலங்கை மன்னரிடமிருந்து பெற்றார். பொதுவாகத் திருப்பணி நடக்கும் கோயில் பகுதிக்குக் கற்பாலங்களைக் கொண்டு வந்து செதுக்கித் தக்க வேலைப்பாடுகளை அதில் செய்து பின்னர் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவது என்பது அன்றையப் பழக்கமாக இருந்தது. இந்த முறைக்கு மாற்றமாக சேதுபதி மன்னர் திட்டமிட்ட வரைவுபடங்களுடன் ஸ்தபதிகளையும், கல் தச்சர்களையும் திரிகோண மலைக்கு அனுப்பி அங்கேயே தேவையான அளவிலும், அமைப்பிலும், கல்துண்களையும், பொதிகைக் கட்டைகளையும், மூடு பலகைகற்களையும் தயாரித்துப் பெரிய தோணிகளில் இராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து இறக்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பணி வேலைகளும், இராமேஸ்வரம் திருக்கோயிலில் தொடர்ந்தது. இவைகளை நேரில் கண்காணித்துத் தக்க உத்தரவுகளை வழங்குவதற்கு ஏற்றவாறு சேது மன்னர் இராமேஸ்வரத்திலேயே தங்குவதற்கும் திட்டமிட்டார். இராமேஸ்வரம் வடக்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு அரண்மனை ஒன்றையும் மன்னரது இருப்பிடமாக அமைத்தார். ஆண்டில் பெரும்பாலான பகுதியை மன்னர் இந்த மாளிகையிலேயே கழித்தார்.[3]
இந்தக் கோயிலின் இரண்டாவது பிரகார அமைப்புத் திருப்பணியுடன் அமைந்து விடாமல் இந்த மன்னர் இந்தக் கோயிலின் அன்றாட பூஜை. ஆண்டுவிழா ஆகியவைகளும் சிறப்பாக நடைபெறுவதற்காகப் பல ஊர்களையும் சர்வ மானியமாக வழங்கியுள்ளார். கீழ்க்கண்ட தானங்களுக்கான இந்த மன்னரது செப்பேடுகள் மட்டும் கிடைத்துள்ளன.
. இராமநாதசுவாமி, அம்பாள் நித்ய பூசைக்கும் ஆவணி மூலத் திருவிழாவிற்கும் கி.பி. 1647ல் திருவாடானை வட்டத்து முகிழ்த்தகம் கிராமம் தானம்.
. இராமேஸ்வரம் கோவில் நித்ய பூஜை கட்டளைக்கு கி.பி. 1658ல் திருச்சுழி வட்டத்து கருனிலக்குடி கிராமம் தானம்.
. இராமேஸ்வரம் திருக்கோவிலில் ஆவணி மூலத்திருவிழா மேலும் சிறப்பாக நடைபெறுவதற்கு முதுகளத்துர் வட்டத்திலுள்ள புளியங்குடி, கருமல், குமாரக்குறிச்சி ஆகிய ஊர்கள் கி.பி. 1673ல் தானம்,
இவைதவிர இராமேஸ்வரம் திருக்கோயிலில் பூஜை, பரிசாரகம், ஸ்தானிகம் ஆகிய பணிகளில் ஈடுபட்டு இருந்த மகாராஷ்டிர மாநிலத்து அந்தணர்களை அந்தப் பணிகளின் மூலம் பெரும் ஊதியங்களை அவர்களே அனுபவித்துக் கொள்வதற்கும் இந்த மன்னர் கி.பி. 1658ல் உரிமை வழங்கிப் பட்டயம் அளித்துள்ளார்.[4]
இந்தத் திருக்கோயிலின் திருப்பணிகளுடன் இந்த மன்னர் சேதுநாட்டின் பல பகுதிகளிலும் உள்ள திருக்கோயில்களுக்குச் சமய வேற்றுமை பாராமல் பலவிதமான தானங்களை வழங்கி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கீழக்கரையில் உள்ள சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லந்தை, மாயாகுளம் கிராமங்களைச் சர்வமானியமாக வழங்கியதை ஒரு செப்பேடு தெரிவிக்கிறது. இராமநாதபுரம் சீமையில் உள்ள திருப்புல்லாணி என்ற திருத்தலம் இராமாயணத் தொடர்பு உடையது ஆகும். இங்குள்ள இறைவன் தர்ப்பாசன அழகியார் மீது திருமங்கையாழ்வார் பல பாசுரங்களைப் பாடியுள்ளார். தமிழகத்தின் வைணவ பெருமக்கள் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து பக்திப் பரவசத்துடன் ஏற்றிப் போற்றுகின்ற தலம் இதுவே ஆகும். சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள பாண்டியர் கால இந்தக் கோயிலை முழுமையாக திருப்பணி செய்த நிலையில், காங்கேய மண்டபம் நுழைவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, திருச்சுற்றுமதில்கள், இராஜ கோபுரம், சக்கரத்தீர்த்தம் மடைப் பள்ளி ஆகிய கட்டுமானங்களுக்குக் காரணமாக இருந்தவர் இந்த மன்னரே ஆவார். இதே போல சேதுநாட்டின் வடபகுதியில் உள்ள இன்னொரு வைணவத் தலமான திருக்கோட்டியூர் கோயிலிலும் பல கட்டளைகளை இந்த மன்னர் நிறுவினார். மேலும் கள்ளர் சீமையில் உள்ள திருமெய்யம் தளத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் திருமெய்யம் அழகியாருக்கும் (பெருமாள்) ரெகுநாத அவசரம் போன்ற கட்டளைகளையும் வேறுபல நிலக்கொடைகளையும் வழங்கியுள்ளார்.
இந்த அறக்கொடைகள் அனைத்தும் சேதுபதி மன்னர் சார்ந்துள்ள இருவேறு சமயங்களான சைவம். வைணவம் என்ற இருபிரிவுகளின் கோயில்களாகும் இந்தக் காரணத்தினால் தான் மேலேகண்ட அறக்கொடைகளை இந்த மன்னர் அந்தத் திருக்கோயில்களுக்கு வழங்கினார் என்று கருதினால் அது தவறு என்பதை அவரது வேறு சில அறக்கொடைகள் புலப்படுத்துகின்றன. அப்பொழுது சேதுநாட்டில் மிகச் சிறுபான்மையினராக சமணர்களும், முஸ்லீம்களும் இருந்து வந்தனர். சேது நாட்டின் வடபகுதியாகத் தாழையூர் நாட்டில் அனுமந்தக் குடியில் அமைந்திருந்த சமணர்களது திருக்கோயிலான மழவராயநாதர் கோவிலும், இஸ்லாமியப் புனிதரான செய்யது முகம்மது புகாரி என்பவரது அடக்கவிடமும் திருமலை சேதுபதி மன்னரது அறக்கொடைகளைப் பெற்றுள்ளன என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
அன்ன சத்திரங்கள் அமைத்தல்:
இந்த அறக்கொடைகளைத் தவிர இந்த மன்னர் இராமேஸ்வரம்
திருக்கோயிலுக்குத் தலயாத்திரையாக வருகின்ற பயணிகளது பயன்பட்டிற்காகச் சேதுமார்க்கத்தில் ஆங்காங்கு பல அன்னசத்திரங்களை முதன்முறையாக நிறுவினார். சாலை வசதிகளும், போக்குவரத்து சாதனங்களும் இல்லாத அந்தக் காலத்தில் வடக்கே வெகு தொலைவிலிருந்து இராமேஸ்வரம் யாத்திரையாக ஆண்டுதோறும் பல பயணிகள் கால்நடையாகவே இராமேஸ்வரத்திற்கு நடந்து வந்தனர். வடக்கே சோழ நாட்டிலிருந்தும், தெற்கே நாஞ்சில் நாட்டிலிருந்தும், மேற்கே மதுரைச் சீமையில் இருந்துமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு வரும் வழியாக அமைந்திருந்தன. இப்பாதைகள் 'சேது மார்க்கம்' என அழைக்கப்பட்டன. இந்தப் பாதைகளில் எட்டு அல்லது 10 கல் தொலைவு இடைவெளியில் ஒரு சத்திரம் வீதம்பல சத்திரங்களை அமைத்து அங்கே ஒவ்வொரு பயணியும் மூன்று நாட்கள் தங்கி, இளைப்பாறி இலவசமாக உணவு பெறுவதற்கும் சிறந்த ஏற்பாடுகளை இந்த மன்னர் செய்தார். இந்த அன்ன சத்திரப் பணிகள் தொய்வு இல்லாமல் தொடருவதற்குச் சேதுநாட்டில் பல ஊர்களை இந்தச் சத்திரங்களுக்குச் சர்வமானியமாக வழங்கி உதவினார். இந்த மன்னரை அடுத்துச் சேதுபதிகளாக முடிசூட்டிக் கொண்டவர்களும் இந்தப் பணியினைத் தொடர்வதற்குத் திருமலை சேதுபதி மன்னரது இந்த ஆக்கப் பணிகள் முன்னோடி முயற்சியாக அமைந்தன என்றால் அது மிகை ஆகாது.
திருமடங்கள் போற்றுதல்:
இந்த மன்னரது ஆட்சியில் சிறப்புக்களைக் காலமெல்லாம் எடுத்துச் சொல்லும் இந்த ஆன்மீகப் பணிகளான திருக்கோயில், அன்னசத்திரம், சிறுபான்மையினரது வழிபாட்டுத் தலங்கள், என்ற துறைகளில் மட்டும் அமைந்து விடாமல் இன்னும் மிகச் சிறந்த இருபணிகளை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. முதலாவது திருமடங்களைப் பாதுகாத்து வளர்த்தது. இரண்டாவது, கற்கண்டிலும் இனிய கன்னித்தமிழை மிகவும் இடர்ப்பாடான காலகட்டத்தில் போற்றி வளர்ததும் ஆகும். திருமடம் என்று சொல்லும்போது நமது மனக்கண்ணில் தோன்றுவது சோழ வளநாட்டில் உள்ள திருவாவடுதுறை திருமடம் ஆகும். தமிழகத்தில் பல வேற்று மதங்களும், ஆற்றிய ஆக்கிரமிப்புகளும் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு முதல் ஏற்பட்டு வந்ததை வரலாறு தெரிவிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' எனத் திருவாசகம் தெரிவிக்கின்ற சைவ சித்தாந்தத்தையும், நடைமுறைகளையும் பாதுகாத்து மக்களை நன்னெறிப்படுத்தும் பணியில் தொடங்கப்பெற்றது திருவாவடுதுறை திருமடம் ஆகும். இந்த மடத்தின் தோற்றம் பற்றிய சரியான காலவரையறை அறியத்தக்கதாக இல்லை. ஆனால் பதினென் சித்தர்களில் மூத்தவரான திருமூலர் என்பவர் இந்தத் திருமடத்தின் தலையாய மூலவர் எனத் தெரிகிறது. திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் அந்த மடத்தின் தலைவர் ஒருவர் இராமேஸ்வரத்தில் இந்த சேதுமன்னரைச் சந்தித்த போது மன்னர் அவரது மடத்தையும் அவரது ஆட்சியில் அமைந்திருந்த திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவிலின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டார். பின்னர் ஆதீனமும், திருப்பெருந் துறை திருக்கோயிலும் மன்னரது பல அறக்கொடைகளுக்கு இலக்கு ஆகின. மேலும் திருவாவடுதுறை ஆதீனம் சேதுநாட்டில் தங்களது சமயப் பணிகளைத் தொடங்கி நடத்துவதற்காக இராமநாதபுரம் அரண்மனையின் மேல வீதியில் திருமடம் ஒன்றும், திருவாவடுதுறையினருக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக தமிழர் பிரான் எனப் பிற்காலத்தில் சேது மன்னர்கள் போற்றப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தவரும் இந்த சேதுபதி மன்னர்தான். தமிழகம் வடவர்களாலும், வடுகர்களாலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது ஆட்சிக்களமாக கி.பி. 17ஆம் நூற்றாண்டு இறுதிவரை இருந்து வந்தது. வடுகர்களது தாய்மொழி தெலுங்கு மொழியாக இருந்ததாலும் அந்த மொழி பிராமணர்களது சமஸ்கிருத மொழியுடன் தொடர்புடையதாக இருந்ததாலும் மதுரை, தஞ்சை செஞ்சி, வேலூர் ஆகிய ஊர்களைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாயக்க மன்னர்கள் தெலுங்கையும, சமஸ்கிருத மொழி ஆகிய இரு மொழிகளை மட்டுமே ஆதரித்து அந்த மொழிகளில் வல்ல புலவர்களுக்கு அன்பளிப்புக்களும், பாராட்டுக்களும் அளித்து வந்தனர். தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்த தமிழ்ப் புலவர்கள் தக்க ஆதரவு இல்லாத காரணத்தினால் வாழ்க்கையில் நலிந்து நொந்து வறுமையின் பிடியில் வாடி வந்தனர்.
இந்த இழி நிலையை அறிந்து மனம் வெதும்பிய சேதுபதி மன்னர் தமிழுக்கும். தமிழ்ப்புலவர்களுக்கும் தேவ தாருவாக (கற்பகத் தாருவாக) விளங்கினார். அப்பொழுது இந்த மன்னரது வீரச் செயல்களையும். கொடைச் சிறப்பையும் செம் பொருளாகக் கொண்டு 100 பாடல்களைக் கொண்ட 'ஒரு துறைக் கோவை' என்ற நூலினைப் பாடிய அமுதகவிராயரைத் தமது அரசவைக்கு வரவழைத்துப் பொன்னும், பொருளும் வழங்கியதுடன் அவரது சொந்த ஊரான சிவகங்கை வட்டாரத்திலுள்ள பொன்னன் கால் என்ற கிராமத்தினையும் அந்தப் புலவருக்குத் தானமாக வழங்கினார்.[5] மேலும் தொண்டை மண்டலத்திலிருந்து சேது நாட்டிற்கு வந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்ற புலவரையும் ஆதரித்துப் போற்றினார். திருமலை மன்னர் மீது தளசிங்கமாலை என்ற இலக்கியத்தைப் பாடியதற்காக மிதிலைப்பட்டி என்ற கிராமத்தை அந்தப் புலவருக்கு மன்னர் தானமாக வழங்கி உதவினார்.[6] அன்று முதல் அழகிய சிற்றம்பலக் கவிராயரும், அவரது வழியினரும் ஒரு நூறு ஆண்டு காலம் மிதிலைப்பட்டியில் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்றினர் என்பதை வரலாற்று வழி அறியமுடிகிறது.
இத்தகைய அரிய சிறந்த தெய்வீகத் திருப்பணிகளையும் சமுதாயப் பணிகளையும், தமிழ்ப் பணிகளையும் தமது நீண்ட 31 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய இந்த மாமன்னர் கி.பி. 1676ல் இராம நாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணித் திருக்கோயிலின் திருத்தேர் விழாவில் வடம்பிடித்துப் பெருமாளையும், தாயாரையும் வணங்கிய நிலையில் மரணமடைந்தார். இவருக்கு ஆண் வாரிசு இல்லையென்பதாக இராமநாதபுரம் சமஸ்தான வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் இராமேஸ்வரம் திருக்கோயிலில் அவர் அமைத்த இரண்டாவது பிரகாரத்தில் சுவாமி சன்னதியில் தென்புறம் இந்த மன்னரது உருவச்சிலை அருகே ஒரு சிறுவன் நிற்பதாகச் சிற்பம் அமைக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
↑ Sathya Natha Ayyar - History of Madura Nayaks (1928)
↑ கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994).
சே. - 3
↑ இந்த அரண்மனை இன்னும் அங்கு இருந்து வருகிறது. (அங்கே மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு வங்கி, அன்னசத்திரம் மற்றும் ஹெலிக்காப்டர் இறங்கும் தளமுமாக இந்தக் கட்டிடம் பயன்பட்டு வருகிறது.
↑ கமால் S.M. Dr - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)
↑ Inam Fair Register - available at the Ramnad Collector's Office
↑ Inam Fair Register-available at the Ramnad Collector's Office.