←i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன்

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்ii. கூத்தன் சேதுபதி

iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி→

 

 

 

 

 


418942சேதுபதி மன்னர் வரலாறு — ii. கூத்தன் சேதுபதிஎஸ். எம். கமால்

 

 

II கூத்தன் சேதுபதி 
(கி.பி. 1622 - 1635)
போகலுரைத் தலைநகராகக் கொண்ட சேதுநாட்டின் இரண்டாவது மன்னராக முடிசூடிக் கொண்டவர் கூத்தன் சேதுபதி ஆவார். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1622ல் தொடங்கி கி.பி. 1635ல் முடிவுற்றது. ஒரு மன்னரது செம்மையான ஆட்சியைச் சுட்டுவதற்கு அவரது ஆட்சிக்காலம் ஒரு முக்கியமான குறியீடு ஆகும். இந்த மன்னரது ஆட்சி 14 ஆண்டுகளுக்குள் அமைந்து முடிவுற்றாலும் சேது நாட்டின் சமுதாய ஆன்மீகப் பணிகளுக்கு ஏற்ற வடிகாலாக இருந்து வந்ததை வரலாறு விளக்குகிறது.
பொதுவாகக் கார்காலத்தின் மழைப்பொழிவினை நம்பிய வகையில் இந்த நாட்டு மக்கள் தங்களது விவசாயப் பணிகளைத் தொடர்ந்து வந்தனர் இந்த நாட்டின் ஊடே பரவி ஒடுகின்ற கிருதுமால் ஆறு, குண்டாறு, வைகை ஆறு, மணி முத்து ஆறு, விரிசிலை ஆறு ஆகிய ஐந்து ஆறுகளில் வரப்பெறுகின்ற மழைவெள்ளம் இந்த நாட்டு விவசாயத்திற்கு அச்சாக அமைந்திருந்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே வரத்துக்கால்களையும் தான்போகிக்கால்களையும் குளக்கால்களையும் அமைத்ததுடன் அவைகளைக் கண்மாய், ஏந்தல், குளம், குட்டை ஆகியவைகளை அமைத்து அவைகளில் மேலே குறிப்பிட்டுள்ள ஆறுகளின் வெள்ளத்தைத் தேக்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்த சேதுமன்னரது ஆட்சியில் மேலும் சில நீர் ஆதாரங்களை இந்த மன்னர் அமைத்து உதவினார் என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.
சமுதாயப் பணிகள்
வைகை ஆற்றின் தென்பகுதி பெரும்பாலும் பார்த்திபனூருக்கு அப்பால் பரமக்குடி, முதுகளத்துார் வட்டங்களில் வறண்ட நிலங்கள் மிகுதியாக இருந்து வந்தன. இந்தக் கன்னி நிலங்களை வளமை கொழிக்கும் கழனிகளாக மாற்றுவதற்கு இந்த மன்னர் முயன்றார். கமுதக்குடி கிராமத்திற்கு மேற்கே கிழக்கு நோக்கிச் செல்லும் வைகை ஆற்றை வழிமறித்துத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு ஒரு பெரிய காலினை இந்த மன்னர் வெட்டுவித்தார். இதில் வரப்பெறுகின்ற வெள்ளத்தைப் பயன்படுத்திப்பல புதிய கண்மாய்களும், ஏந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வறண்ட நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக இந்த மன்னர் மறைந்து 300 ஆண்டுகளுக்கு அப்புறமும் இந்தக் கால்வாய் கூத்தன் கால் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு மக்களது பயன்பாட்டில் இன்றுவரை இருந்து வருகிறது.
இந்த மன்னரது இந்த முன்னோடி முயற்சி பிற்காலச் சேதுபதி மன்னர்களுக்கு வேளாண்மைத் துறையில் வழிகாட்டியாக அமைந்துவிட்டது. ரெகுநாத சேதுபதி மன்னர் குண்டாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகள் பயன்பட, நாராயணகாவேரி என்ற கால்வாயையும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் அதே குண்டாற்றின் கிழக்குப் பகுதியில் ரெகுநாத காவேரி என்ற மிக நீண்ட கால்வாயினைத் தோற்றுவிப்பதற்கும் கூத்தன் கால்வாய் சிறந்த முன்னோடி முயற்சியாக அமைந்தது. மேலும் இந்த மன்னர் வைகை ஆற்றின் வடபுறம் குளத்தூர் அருகே அமைந்துள்ள முதலூர் என்ற ஊரில் ஒரு கண்மாயை வெட்டிக் கலுங்குகளை ஏற்படுத்தினார் என்பதை அவரது கி.பி. 1628 ஆம் வருடத்திய கல்வெட்டு தெரிவிக்கின்றது.[1] ஆன்மீகப் பணிகள்
இவ்விதம் சேதுநாட்டின் சமுதாயப் பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டிய இந்த சேதுபதி மன்னர் தமது தந்தையின் பணிகளை அடியொற்றி இராமேஸ்வரம் திருக்கோயிலில் பல புதிய திருப்பணிகளை மேற்கொண்டார். இந்தத் திருக்கோயிலின் முதல் சுற்றுப் பிரகாரத்தை இந்த மன்னர்தான் அமைத்திருக்க வேண்டும் என நம்புவதற்கு ஏற்ற ஆதாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரச் சுவற்றினை ஒட்டி மகாமண்டபம் ஒன்றினை இவர் நிர்மாணித்ததுடன் அந்த மதிலின் தென்பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறிய கோயிலையும் அமைத்துள்ளார். மேலும் இந்தக் கோயிலின் நடமாளிகையையும் இந்த மன்னரே அமைத்தார் என்பதனைக் கல்வெட்டுச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
அடுத்து மன்னர் கூத்தன் சேதுபதியின் பார்வை இராமேஸ்வரம் திருக்கோயிலின் நிர்வாகத்தில் படிந்து நின்றது. திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் அவர்களுக்குரிய பணி, அவைகளைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் அதற்குக் கோயிலில் இருந்து வழங்கப்படும் பரிசு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்து அவர்களிடம் இசைவு முறி ஒன்றினை எழுதி வாங்கினார். மற்றும் திருக்கோயிலின் ஆதினக் கர்த்தராகிய சேதுராமநாத பண்டாரம் கோயிலில் வரப்பெறுகின்ற வருவாய்களை எவ்விதம் பிரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்க உரையையும் அந்தப் பண்டாரத்திடமிருந்து எழுதிப்பெற்ற செப்பேட்டின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன் அவரது நிர்வாகத்திறனையும் அறிவிக்கும் சிறந்த தடயமாக அந்தச் செப்பேடு அமைந்துள்ளது.
மேலும் இந்தச் செப்பேட்டில் தந்துள்ள வாசகத்தின்படி இந்த மன்னரது மனச்சான்று எவ்விதம் இருந்தது என்பதனையும் அறிய முடிகிறது. இந்த மன்னரது உத்தரவுப்படி இராமேஸ்வரம் திருக்கோயிலில் இரண்டு வகையான கட்டளைகள் இருந்து வந்தன. திருக்கோயிலுக்கு வரப்பெறுகின்ற அன்பளிப்புகள், காணிக்கைகள், நேர்ச்சை ஆகிய அனைத்து வருவாய்களையும் பொன், வெள்ளி அணிகளையும் கோயில் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதுடன், அவை தவிர சேது மன்னர்கள் உடையான் சடைக்கன் சேதுபதி காலம் முதல் சேது மன்னர்கள் வழங்குகின்ற சொந்தத் திரவியங்களும் அணிமணிகளும் மட்டும் தனியாகச் சேது மன்னர் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதும் அந்த உத்தரவு. இதற்கான காரணத்தை விளக்கம் தருகின்ற அந்தச் செப்பேட்டின் வாசகம் வருமாறு:[2] (...."நம்முடைய கட்டளைக்கு நமது சொந்தத் திரவியம் கொண்டு அபிஷேக, நைவேத்தியம், உச்சபம், நடப்பித்து, அந்தப்பலன் நம்மை வந்து சேருகிறதேயல்லாமல், பிறத்தியாருடைய திரவியம் பாவத் திரவியமாக இருக்கும் ஆனபடியினாலே, நம்முடைய கட்டளையிலே அவைகளை வாங்கி நடப்பிக்கத் தேவையில்லை')
அறக்கொடைகள்
இந்தக் கோயிலின் ஆண்டுவிழாக்கள் அன்றாட பூஜைகள் ஆகியவற்றை நடப்பித்து வருவதற்காக இந்த மன்னர் கமுதி வட்டத்தில் உள்ள மருதங்க நல்லூர் என்ற கிராமத்தையும் பரமக்குடி வட்டத்திலுள்ள சேதுகால் என்ற ஊரினையும் கோவிலுக்காகச் சர்வமானியமாக வழங்கியிருப்பதை அவரது இரு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த மன்னர் கி.பி. 1624ல் வழங்கப்பட்ட செப்பேட்டின்படி மன்னார் வளைகுடாவில் முத்துச் சலாப காலங்களில் இரண்டு படகுகள் வைத்து முத்துக் குளிக்கும் மன்னரது உரிமையினை இந்தக் கோவிலுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதனைப் போன்றே அப்பொழுது மக்களால் மிகுந்த மரியாதையுடன் மதிக்கப்பெற்ற திருவாடானை திருக்கோயிலுக்கும் அந்த வட்டத்தில் உள்ள கீரணி, சேந்தணி, கீரமங்கலம் ஆகிய மூன்று ஊர்களையும் தானம் வழங்கியிருப்பதை இன்னொரு ஆவணம் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த மன்னரது தெய்வீகத் திருப்பணியின் பட்டியலில் போகலூரில் பகழிக்கூத்த ஐயனார் கோயில் அமைப்பும், இராமநாதபுரம் கோட்டையின் மேற்குச் சுவற்றினை அடுத்து நிர்மாணித்த கூரிச்சாத்த ஐயனார் கோயில் அமைப்பும் இடம் பெற்றுள்ளன.
சேதுபதிச் சீமையில் இந்த மன்னருக்கு முன்னால் கிராமப்புறக் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஐய்யனாருக்கு வழிபாடும் விழாவும் நடந்ததாகச் செய்திகள் இல்லை. ஆனால் எத்தகைய சூழ்நிலையில் ஐய்யனார் வழிபாடு இந்த மன்னரால் தொடங்கப்பெற்றது என்பது தெரியவில்லை. இவரை அடுத்து வந்த மன்னர்களது ஆட்சியில் சிவவழிபாடு, வைணவ வழிபாடு, அம்பாள் வழிபாடு ஆகிய வெவ்வேறு வழிபாடுகளுடன் குறிப்பாகக் கிராமங்களில் ஐய்யனார் வழிபாடு பரவலாக நடைபெற்றதைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மற்ற பகுதிகளை விட சேதுநாட்டின் வடக்குப் பகுதியில் இராஜசிங்க மங்கலம் வட்டகையில் ஐய்யனாருக்கு மிகுதியான ஆலயங்கள் அமைக்கப்பட்டு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்மீகப் பணியிலும் சமுதாயப் பணியிலும் வரலாற்றில் தமக்கு எனச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள இந்த மன்னர் கி.பி. 1635ல் இயற்கை எய்தினார்.
இந்த மன்னரது ஆட்சியில் நிகழ்ந்த சுவையான செய்தி ஒன்று. இந்த மன்னர் ஒருமுறை இராமேஸ்வரம் திருக்கோயிலினைச் சுற்றிப் பட்டத்து யானையில் அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது முதியவர் ஒருவர் அதற்கு முன்னர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாததால் மன்னர் அமர்ந்திருந்த யானையின் அருகே சென்று அதன் வாலைப் பிடித்து யானை மேலும் நடந்து செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார். உடன் வந்த வீரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை விசாரித்த பொழுது தமது அன்றாட உணவிற்கு வழியில்லை என்ற விண்ணப்பத்தைத் தெரிவிக்கவே அவ்விதம் செய்ததாகச் சொன்னார். இதனை அறிந்த மன்னர் அந்த முதியவரது வல்லமையை அறிந்து மகிழ்ந்து அவருக்கு நாள்தோறும் இருவேளை உணவைக் கோயிலிலிருந்து வழங்குமாறு ஆணையிட்டார். இந்தச் செப்பேடு அரசு சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த முதியவரது பெயர் முத்து விஜயன் சேர்வை என்பதாகும்.
நிர்வாகச் சீரமைப்பு
இந்த மன்னரது சாதனைகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இன்னொரு சாதனையும் உள்ளது. அதாவது இராமேஸ்வரம் திருக்கோயிலில் நாற்புறமும் கடலால் சூழ்ந்த தீவுப் பகுதியாக அமைந்து இருப்பதால் அங்கு நடைபெறும் சமுதாயக் குற்றங்களை உடனுக்குடன் விசாரித்துத் தக்க தண்டனைகள் வழங்குவது சேதுபதி மன்னருக்கு இயலாத காரியமாக இருந்தது. ஆதலால் ஸ்ரீ இராமநாத சுவாமிக்குச் சேதுபதி மன்னர் அறக்கொடையாக வழங்கியுள்ள இராமேசுவரம் தீவுக் கிராமங்களில் உள்ள மணியக்காரர். கணக்கப்பிள்ளைமார், குடியானவர்கள், இராமேசுவரம் திருக்கோயில் பணியில் உள்ள பணியாளர்கள், பரிசுபட்டர், கோயில் தோப்புக்காரர். நந்தவனக்காரர்களை அவரவர் செய்த குற்றங்களுக்கு மறவர் சீமை மன்னர் என்ற முறையில் அவர்களை விசாரித்து ஆக்கினை செய்வதற்கு மன்னருக்குச் சகல அதிகாரங்கள் இருந்தாலும் அவைகளைத் தமது பிரதிநிதியாக இருந்து செயல்படுவதற்கு இராமநாத பண்டாரத்திற்கு அந்த அதிகாரங்களை மன்னர் வழங்கினார். அத்துடன் புனித பூமியான இராமேஸ்வரம் தீவில் குற்றங்கள் பெருகாமல் அவைகளை ஒடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும் இறையுணர்வுடனும் இராமநாத பண்டாரம், குற்றங்களைக் களைந்து நியாயம் வழங்குவதில் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபுறமும் சாராமல் மேன்மையுடன் நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையிலும், சேதுபதி மன்னர் ஆதினக்கர்த்தருக்கு இந்த அதிகார மாற்றத்தை அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் எதுவாக இருந்த போதிலும் இந்த செப்பேடு தமிழகக் குற்றவியல் வரலாற்றின் சிறப்பு ஏடாக என்றும் விளங்கும் என்பதே இயல்பு.[3]
 

 


↑ கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)

↑  கமால் Dr. S.M. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)

↑ S.M. கமால், Dr. - சேதுபதி மன்ன்ர் செப்பேடுகள் (1994 பக்கம்)

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel